பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


வளமான எதிர்காலத்தையும், வருங்காலத்தையும் தந்து வாழ்விக்கும் என்று இந்த ‘வாழ்க்கை’ என்ற சொல் சொல்லாமற் சொல்லிக் கொண்டு இருக்கிறது.

வாழ்வது நம்மால் முடியும். வாழ்க்கை நம் கையிலேதான் இருக்கிறது. வாழ்க்கையின் வசந்தம் நம் வசத்தில்தான் இருக்கிறது. வானத்திலிருந்து அசரீரியாக ஆயிரம் குரல்கள் வந்து மண்ணுலகில் பொழிந்தாலும், அவற்றை வரவேற்கும் மனிதர்கள், நம்பிக்கையுள்ள மனிதர்கள் நாட்டிலே அதிகம் கிடையாது.

அசரீரியை ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லையா? அல்லது அவர்களது அந்தரங்கத்துக்குள்ளே ஏற்பட்டிருக்கிற அலட்சியமா? அல்லது ஏற்கெனவே அடிபட்டு, அதிர்ச்சியுடன், அலங்க மலங்க விழிக்கின்ற ஆதங்கமா என்றால், ஏதுமே அவர்களிடமில்லை. கையில் கிடைக்கும் வரை அதை கற்பனை, கனவு என்றுதான் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள், வாழ்கிறார்கள்.

வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். நம் வாழ்க்கை ஒரு தீபகற்பம் போல. மூன்று பக்கமும் தண்ணீர். ஒரு பக்கம் மலைப்பிரதேசம்.

நமது வாழ்வு முறையே நான்கு வகையாக இருக்கிறது. இதில் முதல் மூன்று நிலை சுற்றிலும் சூழ்ந்திருக்கும் தண்ணீர் போல. அந்தத் தண்ணீரில், நீந்தலாம், குளிக்கலாம்; விளையாடலாம். படகோட்டிப் பண்பாடலாம். ஆனால், நான்காவது பகுதி மலையிலே நடப்பதும், ஜீவிப்பதும்தான் நம்மால் இயலாமல் போய்விடுகிறது.