பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

27


இந்த இலக்கணத்திற்கு எதுவுமே எள்ளளவும் தகுதியில்லாத, இணக்கமில்லாத, பொருத்தமில்லாத மனிதனுக்கு என்ன பெயர் இருக்க முடியும். நிச்சயமாக அவன் மனிதனில்லை. அவனுக்கு வைக்கப்பட்டிருக்கிற பெயர் கினிதன்.

மனிதன் என்பதைக் கிண்டல் பண்ணுவதற்காக, கேலி செய்வதற்காகக் கினிதன் என்று பெயர் வைக்கவில்லை.

கினிதன் என்றால் பீடை பிடித்தவன் என்று பொருள். அதாவது பாழானவன் என்று அர்த்தம். குறைகள் நிறைந்தவன். கஷ்டப்படுபவன்.

மனிதனாக வாழ்வதை விட்டுவிட்டுக் கினிதனாக வாழ்வது நியாயம் இல்லை அல்லவா?

‘மனசு’ உள்ளவனைத்தான் ‘மனுசன்’ என்றனர். மனசு என்பது மனிதன் பெற்ற மதிப்பீட்டை அறிய ஒரு வரப்பிரசாதம்.

சிரிக்க, சிந்திக்க, சொல்ல, சுகத்தைப் பறிமாறிக் கொள்ள, உலக வாழ்க்கையை அனுபவிக்க, உணர்வுகளை ஊட்டிக் கொண்டே இருக்கும் மனசை வைத்துக் கொண்டு, கீழான வாழ்க்கை வாழலாமா? என்கிற அற்புதமான அறிவை, அடைகாத்துக் கொண்டு ‘மனிதன்’ என்ற சொல் இரகசியம் காத்துக் கொண்டு இருக்கிறது.

தரத்தில் தாழ்ந்து போகிற மனிதனைக் ‘கினிதன்’ என்றால், தரத்தில் உயர்ந்து நிற்கிற மனிதனுக்குப் ‘புனிதன்’ - என்று பெயர்.