பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்



இந்திரன் அமுதம் என்பது இந்திரலோகத்துத் தேவாமிர்தம் அல்ல. 'அமுதம்' என்ற சொல். 'அ' + 'முதம் என்று பிரிகிறது. 'முதம்' என்றால் மகிழ்ச்சி 'அ' என்றால் உள்ளும் புறமும்.

ஆக இந்திரனாகியவன் குரு போன்றவர். அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும், உள்ளும் புறமும் மகிழ்ச்சியைத் தருவதினால்தான் அதனை அமுதம் என்றனர். வாழ்வுக்கு ஆனந்தம் அளிக்கும் என்றனர்.

இப்படிப்பட்ட அமுதச் சொற்களை வாங்கிக் கொண்டவர்கள் அவற்றைத் தனியாக அனுபவித்து மகிழ முடியாது. பிறருடன் கலந்து பேசிக் கூடித் துய்ப்பர். அதனால்தான் தமியராய் உண்டலும் இலரே என்றனர்.

துக்கத்தைப் பிறர் துணை இன்றித் தனியாக அனுபவிக்க முடியும். ஆனால் சந்தோசத்தைத் தனியாக யாரும் அனுபவிக்க முடியாது. இதுதான் வாழ்க்கையின் தத்துவம். இந்தத் தத்துவத்தின் படிதான் 'இந்திரன் அமுதம்' என்றார்கள்.

ஆக, மரன், பாமரன், அறன், இந்திரன் என்ற அந்த நான்கு பிரிவினர்தான் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அத்தகைய அரும் பெரும் மனிதத் தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் மாண்புமிகு மனிதனாக வாழலாம். வணக்கத்திற்குரிய மனிதனாகவும் விளங்கலாம்.

இந்த நான்கு வகைப்பட்ட மனிதர்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டும், புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும், நம் வாழ்க்கையைச் சீராக்கிக் கொண்டால், செம்மைப்படுத்திக் கொண்டால், உயரிய வாழ்க்கையை,

உன்னத வாழ்க்கையை நாம் வாழ்ந்து உய்யலாமல்லவா!