பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


இயற்கையில் உள்ள வெப்பம், குளிர், தென்றல், புயல், காற்று, தண்ணீர் இவற்றின் அமைப்புகள் போல, உடலும், வெப்பம், நீர், காற்று இவற்றை மூலதனமாக வைத்துக் கொண்டே இயங்கி வருகிறது என்பதை மனிதன் புரிந்து கொண்டாக வேண்டும். இது உண்மையானதுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் உடலை, மெய் என்றனர். உறுப்புக்கள் பலவற்றை ஒன்றாகக் கட்டி ஒரு உருவமாக ஆக்கி வைத்திருப்பதால், உடலுக்கு ஆக்கை என்று பெயர்.

தெய்வாம்சம் நிறைந்த சந்தோசத்தைக் கொடுப்பதால் தான் உடலைத் தேகம் என்றனர். (‘தே’ என்றால் தெய்வம், ‘கம்’ என்றால் சந்தோசம்.) அது தெய்வம் குடியிருக்கும் இடமென்பதால், ‘தேக அகம்’ என்றனர்.

உடல் அழகாய் இருக்கிறது. அந்த அழகைக் காப்பாற்று என்பதற்காகத்தான் அதைக் காயம் என்றனர். “கா” என்றால் காப்பாற்று என்று ஒரு அர்த்தம். காவல் செய் என்று ஒரு அர்த்தம். விழிப்பாய் இரு என்று ஒரு அர்த்தம். “காய்” என்றால் பூந்தோட்டம் என்று ஒரு அர்த்தம் உண்டு. ஆகப் பூந்தோட்டம் போன்ற உடலைட் பத்திரமாகப் பார்த்துக் கொள் என்பதற்காகத்தான் காயம் என்றனர்.

ஆனால், ‘காயமே இது பொய்யடா’ என்று, தேனான ஒரு உண்மையைத் திசை திருப்பிச் சென்று இருக்கிறார்களே.

சகல ஜீவராசிகளிலும் மனித உடலே, பார்ப்பதற்குச் கவர்ச்சியாகப் பளபளப்பும், மினுமினுப்பும் கொண்டு விளங்குவதால் அதை ‘மேனி’ என்றார்கள்.