பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்



உடல் கருகி மருக வேண்டாம். அமைதி கொள்ளுங்கள். ஆனந்தமாய் இருங்கள் என்று அரவணைக்க வருவதுதான் இருட்டாகும். அது தரும் இனிய சுகந்த மலர்தான் உறக்கமாகும்.

உறக்கம் என்றதும் ஏதோ ஒரு பொழுது போக்குகிற வேலை. நேரத்தைக் கொல்கிற வேலை என்று பலர் நினைத்துக் கொண்டு, தூக்கம் தானாக வந்து துளைக்கும் வரை தடித்தனமாகத் திரிவார்கள்.

பேயாகப் படுக்கையில் விழுந்து, கோட்டானாக குறட்டை விட்டு அந்த அற்புதமான சூழ்நிலையையே அலங்கோலப்படுத்தி விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு உறக்கம் என்றாலும், தூக்கம் என்றாலும் என்னவென்று தெரியாததுதான் காரணம்.

பெற்றோர்களும், பெரியோர்களும் பிள்ளைகளைப் பார்த்துத் தூங்கித் தொலையுங்கள் என்றுதான் சொல்வார் களே தவிர அதைச் சாந்தமாகவும், சந்தோசமாகவும் சொல்லாததும் ஒரு காரணமாக அமையலாம் அல்லவா.

'உறக்கம்' என்ற சொல் 'உற+கம்' என்று பிரிகிறது. 'உற' என்றால் பொருந்துதல் என்றும், 'கம்' என்றால் ‘சந்தோசம்' என்றும் பொருள்.

உடலுக்குச் சந்தோசம் வருவதுபோல உறக்கம் வேண்டும் என்பது ஒரு அர்த்தம். மனதுக்குச் சந்தோசம் வருவது போல உறங்க வேண்டும் என்பது இன்னோர் அர்த்தம்.