பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

75



இயற்கையின் இலக்கணமே தனிதான். இலக்கணம் என்பதற்கு அடையாளம். அழகு, ஒழுங்கு என்ற சிறப்புக்கள் உண்டு. இயற்கை என்பது இந்த அண்டத்தை உருவாக்கிய அரும் பெரும் சக்தியின் அடையாளமாக விளங்குவது.

இயற்கையின் அடையாளம் என்ன? அது அழகு. அழகு இயற்கையில் எங்கே இருக்கிறது. இயற்கையின் பசுமை இணையிலா வளமை. எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிற இளமை, எத்தனைதான் கறைப் படுத்தினாலும், குறை படுத்தினாலும், தன்னிலமையிலிருந்து தளராது காக்கின்ற தூய்மை, ஒழுங்காக அவரவர் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லாமல் செய்து காட்டுகின்ற சீர்மை.

நல்லதோ, கெட்டதோ, அவலமோ, சவலமோ, தாழ்மையோ, கீழ்மையோ எதைப் பற்றியும் கருதாது ஒழுக்கமாக நடத்துகிற நேர்மை. இதனால்தான் இயற்கையின் அடையாளம் மனித இதயங்களில் போய் ஒண்டி ஒளிந்து கொள்ளாமல், மண்டிமலர்ந்து கிடக்கிறது.

இனி இயற்கை அமைப்பிற்கும் மனித உடல் அமைப்பிற்கும் இருக்கின்ற ஒற்றுமைகளை இப்பொழுது நாம் அறிந்து கொள்ளப் போகிறோம். அப்பொழுதுதான் நமக்குத் தெரியும், இயற்கை ஏன் மனித எண்ணத்தின் சன்னலாக, மின்னலாக, அண்ணலாக மிளிர்கிறது என்று.

இயற்கையின் கூறுகளை பூதங்கள் என்பார்கள். பூதம் என்றால் இயற்கையின் ஐந்து கூறுகளையும் குறிக்கிறது. அது நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பதாகும்.