பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


1. வானத்தில் எப்போதும் ஒன்று நடக்கிறது. அந்த ஒன்று ஓசை.

2. காற்று உண்டாக்கும் இரண்டு ஓசையும், ஊறும் (உணர்வு)

3. தீயில் ஏற்படுவது மூன்று, ஓசை, ஊறு, ஒளி.

4. நீருக்குள் கிடைப்பது ஓசை, ஊறு, ஒளி, சுவை.

5. நிலத்தில் நிரவிக் கிடப்பது ஐந்து, ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்.

வானத்திலிருந்து பூமிக்கு வருகிறபோது இயற்கை எப்படியெல்லாம் மாறி மருவி வருகிறது பார்த்தீர்களா? இப்பொழுது மனித உடலும் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

உலகத்தை தாங்குகின்ற நிலத்தின் தாங்கு சக்தியைப் போல கால் பாதத்திலிருந்து இடுப்புவரை உள்ள பகுதி. இது உடலைத் தாங்கும் சக்தியாக அமைந்து இருக்கிறது. இதற்குத் திருவடி மண் தத்துவம் என்று பெயர்.

2. நிலத்துக்கு மேலே நீர்ப்பரப்பு அமைந்திருப்பது போலே, தாங்குகிற கால்களுக்கு மேலே வயிற்றுப்பகுதி. அதிலேதான் நீர் அமைப்பு இருக்கிறது. நாம் விரும்பி அனுப்புகிற உணவை எல்லாம் சிக்கல் இல்லாமல் செரிமானம் செய்து விடுகின்ற நீர் ஊற்றுக்கள், அமிலத்தாரைகள், ஜீரண நீர்கள் மற்றும் எல்லாவிதமான நீரோட்டங்களும் இருக்கின்ற பகுதிதான் வயிற்றுப்பகுதி. அது நீர்ப்பரப்புப் போலத் தன் பணியைத் தொடர்கிறது.