பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

85



காற்றில் மாசு சேரும்போது கசடாகிறது (Pollution) நீரில் மாசு சேரும்போது மண்டியாகிறது. நெருப்பைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. உடலில் ஏறுபடுகின்ற மும்மலங்களை, அழுக்குகளைப் போக்காத வாழ்க்கை, வருகின்ற வியாதிகளைப் போக்கத் தெரியாமலும், நீக்கத் தெரியாமலும் வருந்தி வாழ்கின்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை. மனிதர்களைச் சுற்றி அவர்களது மலங்களை பற்றிப் பேசிக் கொண்டு சுற்றிச் சுற்றி வருகின்றார் காமன் - மன்மதன்.

எழுச்சியும், உணர்ச்சியும் ஏற்படுத்துகிற அன்றாடச் செயல்களால் மக்கள் தினம், தினம் அதிர்ந்து போகிறார்கள், உடலால், மனதால் முதிர்ந்து போகிறார்கள். அந்த வேதனை நரகத்திலிருந்து வெளிவர முடியாமல் உதிர்ந்து போகிறார்கள்.

மன எழுச்சியால் கிளர்ந்தும், மிளிர்ந்தும், ஒளிர்ந்தும் உலகை ஆளவேண்டிய மனிதர்கள், ஒப்பற்ற வாழ்வு வாழ வேண்டிய மனிதர்கள், இப்படி எல்லாச் சுகங்களையும் இழந்து தவிப்பது இயற்கையை சரிவரக் கற்றுக் கொள்ளாததால்தான்.

இயற்கையின் கூறுகளை அணு ஆற்றலின் வீறுகளைக் கண்டு, அதைக் கற்கும்போதுதான் ஒருவன் பண்டிதன் ஆகிறான்.

ஒருவன் இயற்கையின் ஒழுக்கத்தைத்தானே தனக்குள் ஐக்கியப்பட்டுப் பிறருக்காக வாழ்ந்து தனக்காக வாழாதபோது அவன் பெரும் செல்வந்தனாகிறான். பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை.