23
ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்படுகின்ற சூழ்நிலைக் கேற்ப, செயல்படும்பொழுதே, கற்றுக் கொள்ளவும் செய்கின்றார்.
அப்படிக் கற்றுக் கொள்கிறபோது, அறிவால் வளர்கிறார். ஆத்மார்த்தமாகவும் உயர்ந்து கொள்கிறார்.
இவ்வாறு கற்கும் தொடர் நிலை என்பது, பல காரணங்களால் நிகழ்கிறது. நிறைவு காணுகிறது.
1. கற்பவரின் தேவைகள் (Needs of the Learner)
ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, செயல்படுகிற எதிர்வினையின் காரணமாக, கற்றுக் கொள்பவராகிறார்.
ஒருவரின் தேவை அதிகமாகும்போது, அல்லது சூழ்நிலை கடினமாகவோ. கொடுமையாகவோ நேர்கிற போது, அவரின் செயலும் சிந்தனையும் மேலும் விரிவடைகிறது. அவருக்குக் கற்கும் திறமை மிகுதி பெறுகிறது.
ஆகவே, 'தேவைகளே கண்டுபிடிப்பின் தாய்' என்பது போல, தேவைகளும், ஆர்வமும், ஆசையும், ஒருவரை முனைப்புடன் ஈடுபடச் செய்கின்றன. பாடுபட வைக்கின்றன. தேடித் திரிந்து தீர்த்துக் கொள்ளும் அறிவை விரிவுபடுத்துகின்றன. செறிவுபடுத்துகின்றன.
2. கற்பதற்குத் தயார் நிலை (Readiness to learn)
கற்க வேண்டும் என்று ஏற்படுகின்ற ஆர்வமே, சிறப்பாகக் கற்க உதவுகிறது. உத்வேகம் அளிக்கிறது. உற்சாகம் ஊட்டுகிறது.