பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

237


குழந்தைகளுக்குத் தெளிவாகப் புரிந்து கொள்கிற வாய்ப்பும் நிறையவே கிடைக்கிறது.

வாயால் விளக்குவதைவிட,செயல்மூலம் காட்டுகிறபோது, கற்றுக் கொள்ளும் திறன் மிகுதியாகவே கிடைக்கிறது.

(இ) ஒரு சில செயல்களை பகுதி பகுதியாக செய்து காட்டமுடியாது.அதாவது கம்பிமேல் உருளல், கம்பியில் சுற்றல், நாட்டிய முத்திரைகள் எல்லாம் முழுமையாகச் செய்து காட்டக் கூடிய காரியங்களாகும்.

ஆகவே, பகுதி முழுமை முறை, முழுமை முறை என்பனவற்றில் செய்து காட்டுகையில், இடத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தக் காரியமும் கற்பிப்பவரின் ஆர்வத்தாலேதான் சிறப்பாக அமையும்.

(ஈ) ஒரு திறமையைக் கற்பித்தவுடன், அதற்கு இயைபான ஒற்றுமையான மற்றொரு திறமையையே கற்பிக்க வேண்டும். எதிர்மாறான திறமைகளை இணைத்துச் செய்து காட்டும் போது, கற்பவர்கள் கஷ்டப்படுவார்கள். அந்தக் காரியமும் வெற்றிகரமாகவும் ஆக முடியாது. ஆகவே ஆசிரியர்கள் திறமைகளின் தொடர்புகளை அறிந்து கொண்டு, அவற்றின் வளத்திற்கேற்ப வகைப்படுத்தி, கற்றுத் தரல் வேண்டும்.

(உ) கற்றுக் கொள்பவர்கள் திறமையில் தேர்ச்சியில் வளர்ந்து கொண்டே வருகிறபோது, வளராநிலை (Staleness) என்ற ஒரு நிலை ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்ட வளராநிலை அமைகின்ற சூழ்நிலை ஏற்படுகிறபோது, நிறுத்திவிடவேண்டும்.வேறுபல சூழ்நிலையை அமைத்து, உற்சாகப்படுத்திடவேண்டும்.