பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

249


இந்தியாவின் கலாசாரம் வேறு. பண்பாடு வேறு. தட்ப வெப்ப சூழ்நிலைகள் போன்றே. சரித்திர வரலாற்று வாழ்க்கை அமைப்பும் வெவ்வேறு என்பதால், அந்தந்த நாட்டின் கலாசாரத்திற்கேற்பவே, உடற்கல்வியும் அமைய வேண்டும். அப்படியே தான் அமைந்தும் இருக்கிறது.

உடற்கல்வியில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், அந்தந்த நாட்டின் கலாசாரங்களை அறிந்து, அவசியமானவற்றைத் தெரிந்தெடுத்து, அவற்றை அந்தப் பாடத்திட்டங்களுள் புகுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, முன்னுரிமைகளை வழங்கி இருப்பதால்தான், உலகமெங்கும் உடற்கல்வியானது, உன்னதமான புகழுடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

உதாரணமாக, யோகம் என்பது இந்திய கலாச்சாரத்தின் உயிர் நாடியாக விளங்குகிறது. உடலையும் உள்ளத்தையும் வலிமையாக வைத்துக் காக்க, நமது முன்னோர்கள் நயந்து பின்பற்றிய யோகத்தை விட்டு விட்டு, உடற்கல்வி பயிற்றுமுறை இருந்தால் அது எப்படி இருக்கும்? யார் ஏற்றுக் கொள்வார்?

இப்படித்தான், உடற்கல்வியானது, ஒவ்வொரு கலாசாரத்தின் உயிர்க் கொள்கைகளையும் உவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சமுதாய மதிப்பும் குணப்பண்புகளும்

சமுதாய மதிப்பு பலதரப்பட்ட பண்புகளால் வளர்கிறது. சமுதாய அங்கத்தினர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள ஏற்படும் உந்துதல்கள் காரணமாக, சிறப்பாக செயல்பட்டு, பெருமையை தேடிக் கொள்கின்றனா்.