பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

உடற்கல்வி என்றால் என்ன?


இருத்தல், உறுதி அளித்ததற்கேற்ப உண்மையோடு அவற்றை செயல்படுத்துதல், உண்மையாய் பிறருக்கு இருத்தல், உதவுதல் போன்ற பண்புகளே, சமுதாய ஒற்றுமையைப் பலப்படுத்திவிடுகின்றன.

எனவே, போட்டிகளும் ஒற்றுமையும் ஒன்றைச் சார்ந்து ஒன்று செல்வதுதான், முன்னேற்றத்தை வளர்க்க உதவுவதாக அமையும். சுகாதாரமான தூய போட்டிகள் சுகமான காட்சியை அளிக்கின்றன. சுற்றியுள்ளவர் களையும் சந்தோஷத்தில் ஆழ்த்துகின்றன.இப்படிப்பட்ட ஆரோக்கியமான, ஆனந்தமான சூழ்நிலையை அளிப்பதில், உடற்கல்வி உலகத்தில் முன்னணியிலே நின்று செயல்படுகிறது.

சமுதாயம்

நாம் நமது சமுதாயத்தில் ஒர் அங்கமாகத் திகழ்கிறோம். நமது முன்னோர்கள் சமுதாயத்தை அமைத்துக் கொண்டதே, சேர்ந்து வாழத்தான். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒற்றுமையுடன் வாழத்தான். ஒருவரை ஒருவர் மதித்து, அனுசரித்து, உதவி வாழவே சமுதாய அமைப்பு இருக்க வேண்டும் என்பதே, எல்லோரின் ஆசையும்.

ஒரு குழந்தை தன் திறமையை மற்றவர்கள் முன்னே காண்பித்து, அவர்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறது. இந்தப் பண்பு தான் எல்லா மனிதர்களிடையேயும் இருக்கிறது. இந்த எண்ணமே வளர்ந்து தன் திறமையை வெளிக்காட்டி, மற்றவர்களுடைய திறமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, திருப்தியடைய முயன்றதன் விளைவே, போட்டிகளாகப் பிறப்பெடுத்து விட்டன.