பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

உடற்கல்வி என்றால் என்ன?


பழமையின் மேன்மையுடன், புதிய கருத்துக்கள் பதிந்து கொள்ளும் பாங்கும் சிறப்புடன் நடைபெறுகிறது என்பதை ஆசிரியர்கள் அறிந்து, நடைமுறைப் படுத்திட வேண்டும்.

3. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையிலும் உண்டு. விளையாட்டிலும் உண்டு. வெற்றியில் வெறியும், தோல்வியில் தளர்ச்சியும் நேர்வது இயல்பு தான். வெற்றியே வேண்டும். தோல்வியே வேண்டாம் என்று யாரும் எதிர்க்கவும் முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.

தோல்வி தாழ்வு மனப்பான்மையையும், வெற்றி தலைக்கணத்தையும், தடித்தன நினைவையும் தோற்றுவிக்கும் நிலைக்களனாவதால், நாம் இந்த சூழ்நிலையை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

வெற்றியை அடைய விரும்புகிறவர்கள், நீதி நியாயத்துடன், விதிமுறைகளுக்குட்பட்ட முயற்சியுடன் பாடுபடவேண்டும். குறுக்கு வழியில் அடாவடித் தனத்துடன் வெற்றி பெற்ற உலக வீரர்கள் யாரையும், மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, பழித்து ஒதுக்குகின்றனர். நற்பண்புகளுடன், நியாயமாக, விதிக்கடங்கி தோற்ற வீரர்களையும், பார்வையாளர்கள் உலகளாவப் புகழ்வதையும் நாம் கேட்டிருக்கிறோம்.

ஆகவே,சிறந்த குணங்கள் (Moral values) உள்ளவர்களையே சமுதாயம் வரவேற்கிறது. அவர்களையே சமுதாயம் எதிர்பார்க்கிறது. ஆசிரியர்கள், நடுவர்கள், துணை நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இப்படிப் பண்பாளர்களாக செயல்பட்டால், சமுதாயப் பாதை சந்தோஷப் பாதையாகவே மாறிவிடும் அல்லவா?