பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

273


குறிப்புகள் உண்டு. அந்தத் தகுதிகள் பற்றி சிறிது விளக்கமாகக் காண்போம்.

1. தன்னம்பிக்கை

நல்ல தலைவனுக்குரிய முதல்தரமான குணநலன் தன்னம்பிக்கைதான்.தன்னைத்தான் நம்பாத ஒரு தலைவன் மற்றவரை எப்படி நம்புவான்? அவனது சந்தேகம் அவனை மட்டும் அழிக்காமல், அடுத்தவர்களையும் வீழ்த்திவிடும் அவனைப் பின்பற்றுவோர்களையும் பெரிதும் துன்பப்படுத்திவிடும்.

ஆகவே, ஒவ்வொரு காலக் கட்டத்திலும், எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியிலும் (Stop) அவன் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டே வரவேண்டும். இந்த நம்பிக்கைதான் நம்பியுள்ளவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும்.

எந்த சந்தர்ப்பத்திலும் களைத்துப் போகாத, கஷ்ட நேரங்களிலும் கலங்கிப் போகாத திடமனம் உள்ளவர்களே, தங்கள் மக்களை வழி நடத்திச் செல்ல முடியும். வெற்றிகரமாகவும் வாழ்விக்க முடியும்.

அதுபோலவே, உடற்கல்வித் துறையிலும், தன்னம்பிக்கைதான் எல்லா செயல்களிலும் தலையாய இடத்தை வகித்து வருகின்றது. உதாரணமாக, தன்னம்பிக்கை இல்லாதவர்கள் சாதாரணக் குட்டிக் கரணம் கூடப் போட முடியாது. ஏனென்றால், ஏதாவது நேர்ந்துவிடும் என்ற பயம் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும். ஒடுகளப் போட்டிகளில் கூட தாண்டுவதும் எறிவதும் தன்னம்பிக்கை மிகுந்திருக்கும் பொழுதுதான், சரியாகவும் குறியாகவும் செய்ய முடியும்.