பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

உடற்கல்வி என்றால் என்ன?


முடியாமல், கலங்கிப்போய் விடுகிறார்கள். பதறிச் செய்கிற அவர்கள் காரியம் எல்லாம் சிதறிப் போய் விடுகிறது.

ஆகவே, செய்யும் செயலின் தன்மையை அறிந்து, அதன் பெருமையை புரிந்து கற்பனை நயத்துடன் வலிமை மனத்துடன், சுறுசுறுப்பாக இயங்கி, வெற்றியை ஈட்ட வழி வகுக்கிறவனே வல்லமை மிகுந்த தலைவனாக விளங்குகிறான்.

4. முடிவெடுக்கும் திறன்

எந்தக் காரியமாக இருந்தாலும், அதுபற்றி அலசி ஆராய்ந்து, நல்ல முடிவெடுக்கத் தெரிந்தவரே, சிறந்த தலைவனாகிறார்.

நுண்மையாக சிந்திக்கத் தெரிந்த மனிதனே, மற்றவர்களைவிட மாண்புமிகு காரியங்களை செய்து முடித்து சிறப்படைகிறான், மனத் தெளிவுள்ளவர்களே, சாடிவரும் சந்தர்ப்பங்களுக்கேற்ப சாமர்த்தியமாக ஈடு கொடுத்து, சமத்காரமாக திட்டங்களைத் தீட்டி வெல்கிறார்கள்.

விளையாட்டுக்களில் அதிகமாகவும் அடிக்கடியும் இக்கட்டான சந்தர்ப்பங்கள் ஏற்படுவது இயல்புதான். அந்த அச்சமூட்டும் சந்தர்ப்பங்களில், அறிவுபூர்வமாக அணுகி, விரைந்து முடிவெடுத்து வெளிவருவதும், விடுதலையடைவதும், வெற்றி பெறுவதும் நல்ல பண்பாளர்களாலே தான் முடிகிறது. ஆகவே மனத்தெளிவும், முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள் மட்டுமே, மற்றவர்களுக்கு வழிகாட்டும் மகாசக்திபடைத்தவர்களாக விளங்குகின்றார்கள்.