பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
61
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தனிப்பட்டவர்களின் ஒற்றுமையை வளர்த்து, அதன் முலம் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்துவது உடற்கல்வியின் உவப்பான குறிக்கோளாகும்.

4. பண்பான பழக்க வழக்கங்கள் :

மரியாதையுடன் பழகுதல், நேர்மையான விளையாட்டு, நீதி காக்கும் விளையாட்டுப் பண்புகள் (Sportsman ship) போன்ற பண்புகளை வளர்ப்பதில் உடற்கல்வி எப்பொழுதும் முனைப்பாக செயல்படுகின்றது. விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், நாளாக நாளாக நல்ல பழக்க வழக்கங்களில் தேர்ந்து, மேன்மை பெறுவது நிச்சயமாக நடக்கும்.

அத்துடன், தனிப்பட்டவர்களின் உடல் நலத்தை வளர்ப்பதும், குடும்ப நலத்தை உறுதிப்படுத்துவதும், ‘சிறந்த குடும்பம், சிறந்த வாழ்க்கை’ என்று செழிப்பாக்குவதும் உடற்கல்வியின் உன்னதமான சேவை யாகும்.

III. பொருளாதார மேன்மையளிக்கிறது (Economic Efficiency)

கீழ்க்காணும் குறிக்கோள்களை அடைய, உடற்கல்வி உதவுகிறது.

1. வேலைத் திறனில் விருத்தி செய்கிறது:

வாழ்வில் வருமானம் பெற வேலை வேண்டும், வருமானம் பெருக, வேலையில் திறமை மிகுதியாகிட வேண்டும். வாழ்வின் வெற்றிக்கு செய்கிறவேலையில் நுணுக்கம் பெருகிட வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்பது பழமொழி அல்லவா!