பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

உடற்கல்வி என்றால் என்ன?




கொள்கையின் விளக்கம் :

“அனுபவங்கள் மூலமாக அல்லது அறிவின் முதிர்ச்சியின் காரணமாக எழுகின்ற விஞ்ஞானக் கருத்துக்கள் அல்லது தத்துவார்த்தக் கருத்துக்கள் தாம், மக்களின் தலையாய கொள்கையாக மலர்கிறது” என்று கூறுகிறார் JF வில்லியம்ஸ் அவர்கள்.

ஆக, கொள்கை என்பது ஒர் உண்மையான கருத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் ஆரம்பமாகிறது. அதைத் தொடர்ந்து, அந்த உண்மையைச் சார்ந்த கருத்துக்கள் கொள்கைகளாக மாறி, வாழ்வுக்கு வழி காட்டும் வண்ணம் மாறிவிடுகின்றன.

அப்படிப்பட்ட கொள்கைகளை நாம் இரண்டு வகையாகப் பெறலாம்.

1. தத்துவங்களிலிருந்து பெறுபவை (Philosophy)
2. விஞ்ஞானத்திலிருந்து பெறுபவை (Science)

1. தத்துவக் கொள்கை :

தத்துவம் என்பது ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக அறிந்து கொண்டதும், நம்பிக்கை நிறைந்ததுமான உண்மைகளாகும்.

இத்தகைய உண்மைகள், இயற்கையை ஆய்ந்து அறிந்து கொண்டதிலிருந்து, அவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களிலிருந்தும், கண்ட காட்சிகளில் பெற்ற களிப்பிலிருந்தும் உருவானவைகளாகும்.

அந்த உண்மைகளே நாளடைவில் கொள்கைகளாக மாறிவிடுகின்றன. மாற்றம் பெறுகின்றன. அப்படிப்பட்ட உண்மைகள் தனிப்பட்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.