பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டரை மைல் தூரத்தை அவர் நடக்காமல், உல்லாசச் சவாரியில் உட்கார்ந்து போய் வருகிறார் என்றால், அவர் 13 நாட்களில், தன் உடம்பில் 1 பவுண்டு கொழுப்பினை சேகரித்துக் கொள்கிறார்.

இப்படி அவர் உடல் இயக்கச் செயல்கள் இல்லாமல் உட்கார்ந்து கிடப்பதும், உண்ணுவதில் உற்சாகம் காட்டுவதும் தான் ஊளைச் சதைகளை உருவாக்கி விடுகின்றன என்று வல்லுநர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

பொதுவாக இரண்டு காரணங்களால், ஊளைச் சதைகள் உருவாகி விடுகின்றன. ஒன்று உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் (Metabolism). இரண்டாவது தவறான உணவு ஏற்பும் முறை. (Regulation of Diet).

வளர்சிதை மாற்றம் என்பது செல்களில் விளையும் மாற்றம். கொழுப்பு செல்கள் உருவாகி, அப்படியே இருந்து விடுவது. எந்தவித மாற்றமும் இன்றி சேமிப்பு நிலையிலேயே செழித்துக் கொண்டிருப்பது.

செல்களுக்கிடையே கொழுப்புச் சத்து ஏற்பட்டு மேலும் மேலும் சேமிக்கப்படும் போது, விரைவில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டால் தான், செல்களின் இயல்பான இயக்கங்கள் சீரடையும்.

ஒரு சிலருக்கு செல்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் சீக்கிரமாக நிகழும். இன்னும் சிலருக்கு வேகம் இல்லாமல் மெது மெதுவாகவும் நடைபெறும்.

மெதுவாக மாற்றங்கள் நடைபெறும் போது தான் கொழுப்புச் சத்துக்கள் கரைந்து போகாமல் கட்டிப்போய் விடுகின்ற தன்மையை அடைகின்றன.