பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றால், அறிவு உரிய இடத்தில் இல்லையென்று பொருள் ஆகிப் போகும்! எளிமை, எளிமை, தண்ணீர் போன்ற எளிமை! இதுவே கவிராயருக்கு வாய்த்த தனிப் பெருமை! பெருமை! பெருமை! இசைமேகங்களைப் படைதிரட்டி, 25 ஆண்டுகளாக, தமிழர் நெஞ்சக் காடுகள் நன்செய் ஆகப் பெருமழை பொழிந்த கவிராயரின் அருமைத் திருமகனார் திரு. இராமகிருஷ்ணன் அவர்கள், கவிராயருடனிருந்த பேறு பெற்ற என் அருமை அன்பர் புலவர் திரு. வீரப்பனார் அவர்களுடன் ஒருநாள் என் இல்லம் புகுந்தார். அவர் கைகளில் 'பைண்ட்' செய்யப்பட்ட பழைய நோட்டுப் புத்தகங்கள் இருந்தன. 'ஐயா, இவை என் ஐயாவின் சொத்துக்கள். இவற்றைத் தேடி ஆராய்ந்து ஒரு செப்பமான பதிப்பு ஒன்றை உருவாக்குங்கள்' என்று அன்புமிக வேண்டினார். நிறைபண்பாளரான அவரின் வேண்டுகோள் என் நெஞ்சை வருடியது. "ஐயா! இது உங்கள் சொத்து மட்டும் அல்ல; தமிழ் உலகின் சொத்தும் ஆகும். அன்பர்கள் உதவியுடன் தொகுத்துத் தருகின்றோம்' என்றேன். அன்று முதல் அருமை அன்பர்கள் திருவாளர்கள் புலவர் ப. வீரப்பனார், புலவர் சுரேந்திரனார் ஆகியோருடன் நானும்இணைந்து அவ்வேடுகளை ஆய்ந்தோம். அவ்வாறு ஆய்ந்து வருகையில் கவிஞரின் பல புதிய பாடல்கள் கிடைத்தன. புதையல் எடுத்த தனம் போல இதுவரை வெளிவராத கவிஞரின் அருமைமிக்க பாடல்கள் அறுபதுக்கும் மேல் அவ்வேடுகளில் புதைந்து கிடந்தன. அவற்றைக் கண்டபோது, முல்லைப் பாட்டுப் பதிப்பிக்கும்போது, கிடைக்காத பூக்களின் பெயர்களை ஒர் புது ஏட்டில் பார்த்த, தமிழ்த் தாதை உ.வே.சா. அவர்கள் அடைந்த மகிழ்ச்சியினை வேண்டுமென்றால் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு ஒப்பிடலாம். கண்டெடுத்த புதையல்களுள், கலைஞருக்குக் கவிஞர் எழுதிய அருமையான கவிதை மடலும் ஒன்று. கலைஞருக்கும் கவிஞருக்கும் இருந்த நெஞ்ச நெருக்கத்தை, உருக்கத்தை அச்சீட்டுக் கவியில் காணலாம். திருப்புகழ் இயற்றிய அருணகிரியார், சந்தக் கவி வேந்தர்' என அழைக்கப்படுபவர், அவர் திண்டிமை' எனும் தோற்கருவியைப் பலவாறு தாளத்திற்கேற்ப இசைக்கச் சொல்லி, அவ்விசையில் மூழ்கித் தோய்ந்த பின்பு, சந்தங்களை அமைத்துக் கொண்டு திருப்புகழ்ப் பாடல்களைப் பாடுவாராம். கவிராயரும், தம்பட்டம் (தப்பு) என்னும் தோற்கருவியை இயக்கும் தொழிலாளர்களோடு சேர்ந்து ஆடியும், பாடியும் சந்தத்தில் iv