பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வதற்கு ஏற்றதொரு கணிசமான செல்வத்தைத் தந்து விட்டுத்தான் அவர் சென்றிருக்கின்றார். ஆனால் எங்கள் குடும்பத்தினர்க்கு விட்டுச் சென்றுள்ள புகழ்ச் செல்வம் உள்ளதே! அதை என்னென்று சொல்வது அது எவ்வளவு சிறந்தது எத்தனை காலங்கட்கு அழியாதது அது நிலத்தினும் பெரியது: வானிலும் உயர்ந்தது. கடல் நீரினும் விரிந்து நிற்க வல்லது நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது. வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகள் கிட்டவில்லை! நெஞ்சம் கரைவதால் கண்கள் நீர்க்குளங்கள் ஆகின்றன: எங்கள் வம்ச விருட்சத்தில் உடுமலை நாராயணகவி குடும்பத்தினர். என்னும் அழியாத முத்திரையை அளித்துவிட்டுப் போயிருக்கின்றார் எங்கள் அருமைத் தந்தையார். தமிழ்த்திரை உள்ளவரை, அதில் இசை உள்ளவரை என்றும் அவர் பதித்த அந்த முத்திரை இருந்து கொண்டே இருக்கும். காலப் புனலால் அது கரையப் போவதில்லை. மண்ணின்மேல் வான்புகழ் நட்டுவிட்டுச் சாவா உடம்பு எய்தியுள்ள ஒரு மாமேதையின் மடியில் நாங்கள் வளர்ந்தோம்; அவர் மணிக்கரங்களால் உணவூட்டப் பெற்றோம்; தமிழ் சுமந்த அவர் தோள்களால் நாங்கள் சுமக்கப் பெற்றோம். இதைவிட வேறு என்ன பேறு வேண்டும்? இதுபோதும் எங்களுக்கு தமிழகம் வியந்து போற்றும் தலைவர்கள் பலரும் எங்கள் தந்தையரின் தோள்களைத் தழுவி அனைத்தவர்கள்! நாங்கள் அவர் தோள்களைத் தழுவி அனைத்தவர்கள்! இதுபோதும் எங்களுக்கு வேறு என்ன வேண்டும்? தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எங்கள் இல்லத்திற்கு வருவார் - அப்பாவைப் பார்க்க பேரறிஞர் அண்ணா வருவார் - அப்பாவைப் பார்க்க! விலை மதிப்பற்ற நகைக்கலை விற்பன்னர் கலைவாணர் வருவார் - அப்பாவைப் பார்க்க! கன்னல் தமிழ் ஏந்திப் போராட்டக் களங்கள் பல காணும் கலைஞர் வருவார் - அப்பாவைப் பார்க்க! புரட்சிப் பாப் புயல் பாவேந்தர் வருவார் - அப்பாவை பார்க்க X