பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுமலை நாராயண கவி அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் கொங்குநாட்டின் கோயமுத்துர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி ஆகிய பூளைவாடி என்னும் சிற்றுர், பேரூர்கள் எல்லாம் வியக்கத்தக்க ஒரு பெருமை பெற்றுக் கொண்டது. அங்குதான் முத்தம்மாள் - கிருஷ்ணசாமி செட்டியார் தம்பதிகட்கு 1899-ஆம் ஆண்டில் உடுமலை நாராயண கவிராயர் என்று தமிழ் உலகம் அன்பு நிறைய அழைக்கின்ற நம் கவிவாணர் பிறந்தார். கவிஞருக்கு அவர் பெற்றோர் இட்ட இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். 24மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தில் பிறந்த கவிஞர், இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்தார். 'கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்பது கவிஞர் வாழ்வில் முழு உண்மை ஆயிற்று. இளமையில் தந்தையை இழந்தோர் எத்தனை துன்பங்களை அடைய நேருமோ அத்தனை துன்பங்களையும் நாராயணசாமி அடைந்தார். தமையனார் தனுஷ்கோடி ஆதரவில்தான் வாழ நேர்ந்தது, சுற்றுப்புறக் கிராமங்களுக்கெல்லாம் தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று விற்றார் நாராயணசாமி. இருபத்தைந்து பைசா வருமானம் ஒரு நாளைக்குக் கிடைக்கும். பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்போடு விடைபெற்றுக் கொண்டது. பள்ளி விடைபெற்றாலும் கலைத்தேவி அவர் உள்ளத்திலிருந்து விடைபெறவில்லை. கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி முதலிய இம்மண்ணின் கலைகளில் மிகுந்த ஆர்வங்கொண்டு பங்கெடுத்துக் கொள்வார் இளைஞர் நாராயணசாமி. xvi