பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாம்பிறந்த மண்ணாகிய பூளைவாடியில் நிகழும் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டுதோறும் 'இராம நாடகம் நடக்கும். இலக்குவன் வேடம் இவருக்கே இவ்வாறு இளமைப் பருவத்தில் உள்ளுர்க் கலைகளில் தோய்ந்து பெற்ற ஈடுபாடே, திரைக்கலைக் கோட்டையின் மேல் யார்க்கும் எட்டா உயரத்தில் இவர் கொடி நாட்ட வழியமைத்துக் கொடுத்தது எனலாம். அக்காலத்தே நாடகத்துறையில் புகழ்பெற்றுச் சிறந்தவர், கொடிகட்டிப் பறந்தவர் மதுரை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அவருக்கு நெருங்கிய நண்பராய்த் திகழ்ந்தவர் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர். இக்கவிராயர்தான் அருணாசலக் கவிராயரின் ஒப்பற்ற 'இராம நாடகத்தை மேடை நாடகம் ஆக்கித் தந்தவர். முத்துசாமிக் கவிராயர் உடுமலை வட்டாரம் முழுவதும் இசைகொட்டி வாழ்ந்தவர். அவருடைய மாணவர் சந்தான கிருஷ்ண நாயுடு நடத்தி வந்த ஆரிய கான சபா எனும் நாடக மன்றத்துக்கு ஆசிரியராகவும் இருந்தார். அப்பெருமகனார் ஒருமுறை பூளைவாடித் திருவிழாவில் நாராயணசாமி பங்கு பெற்ற நாடகக் காட்சிகளைத் தம் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார். கவிவாணரின் கலைத் திறத்தையும், கவித்திறத்தையும் ஒருசேரக் கண்டுகளித்த அவர் என்னுடன் வந்துவிடு' என்று தம்முடன் அழைத்துச் சென்றார். பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை, முத்துசாமிக் கவிராயர் செல்லுமிடம் எல்லாம் உடன்சென்று நாடகம் நடித்தும், எழுதியும் பாடியும் அங்கங்கே கலைகள் தேரும் அறிவனாய்’ இயங்கி, அக்கலை நுட்பங்கள் அனைத்தையும் தம் இதயத்தில் தேக்கிக்கொண்டு தம் ஊர் திரும்பினார் கவிஞர் நாராயணசாமி! இருபத்தைந்தாம் வயதில் ஊர்திரும்பிய கவிஞர் கதர்க்கடை ஒன்றை அன்றிருந்த தேசிய எழுச்சியின் விளைவாகத் தொடங்கினார். அக்காலத்தே கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். அப்போதுதான் பேச்சியம்மாள் என்னும் குணவதியை மனையாட்டியாக ஏற்றார். நான்கு ஆண் மக்களையும் பெற்றார். கவிராயர் செய்த பருத்தி வாணிபத்தில் பெருநட்டம் ஏற்பட்டது. தாங்கமுடியவில்லை கடன் தொல்லை நூறு ரூபாயைக் கையில் வைத்துக் கொண்டு பிறந்த ஊரைவிட்டுப் புறப்பட்டார். Xvi