பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காலத்தினால் பழையாள்!
கோலத்தினால் இளையாள்!

எங்கள் தமிழ்மொழிகற் கண்டுங் கனியுமென்ன
இன்பம் தருவதென்று சொல் சொல் சொல்கிளியே!
எங்கும் புகழ்பெறுமுச் சங்கம் தவழவரும்
பொங்கும் கடலிதென்று சொல் சொல் சொல்கிளியே!(எங்கள்)



குள்ளன் அகத்தியமுனி வள்ளல் இலக்கணமாம்
நல்லணி யைப்புனைந்த நங்கை என்பார்
உள்ளம் எனும்விழியில் கொள்ளும் அஞ்சனம்என்றே
எல்லவர்க் கும்எடுத்துச் சொல் சொல் சொல்கிளியே!(எங்கள்)



மேதினிக் கும்பொதுவில் நீதிவ குத்தகுறள்
வேதம்ப டைத்ததென்பர் மேலோர் - நூலால்
கோத கன்றபுலவர் நாவில் நடனமிடும்
நாத வடிவமென்று சொல் சொல் சொல்கிளியே!(எங்கள்)



காலத்தி னால்பழமை கோலத்தினால் இளமை
சாலப் பொருந்தும்தமிழ்த் தாயென் றோதாய்
கூழுக் குப்பாடியதோர் ஏழைக்கிழவி பன்னாள்
வாழக் கனிகொடுத்த செஞ்சொல் சொல்கிளியே!(எங்கள்)



பாச்சி வெண்சோச்சியென்று பாசங்கலந்த அன்பால்
ஆச்சி மொழிந்ததென்று சொல்லாய் பூவாய்!
வாச்ச மனைவிமக்கள் வாஞ்சையுடன் செவியில்
பாச்சும் அமுதமென்று சொல் சொல் சொல்கிளியே!(எங்கள்)



காவியக் கம்பன்இளங் கோவைப் புகழ்வடிவில்
பாவில் காட்டுகின்ற சீரார் செல்வி
காவலர் மூவர்களும் கண்போல் வளர்த்ததமிழ்
நாவினில் வாழ்கவென்று சொல் சொல் சொல்கிளியே!(எங்கள்)



சொல்லப் புரிந்துகிள்ளைப் புள்ளும் உடன்தொடர்ந்து
சொல்லும் மொழியிதென்று சொல் சொல் சொல்கிளியே!
தெள்ளித் தெளிந்தமலர்க் கள்ளும் கரும்பின் - ரச
வெள்ளம் நிகர்த்ததென்று சொல் சொல் சொல்கிளியே!(எங்கள்)





8