பக்கம்:உணர்வின் எல்லை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. வள்ளுவர் ஒரு புரட்சியாளர்

‘கறுத்தவையெல்லாம் குயிலுமல்ல; காவி உடுத்தவரெல்லாம் விவேகானந்தரும் அல்லர்,’ என்றார் ஒரு பேரறிஞர். அதுபோலப் ‘புலவர்’ என்று போர் படைத்தவரெல்லாம் புலவராகிவிடமாட்டார். யார் தலைசிறந்த புலவர்? எது தலை சிறந்த இலக்கியம்? இவ்வினாக்கட்கு விடைகாண, ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். உண்மையான புலமையில் புதுமை மணக்கும்; பொதுமை விளங்கும்; புரட்சி வீடும்; இப்பண்புகள் யாவும் பொருந்திய பெருமை வாய்ந்த ஒரு பெருந்தமிழ் இலக்கியம் திருக்குறள் அன்றே? வள்ளுவர் வாக்கில் எத்தனையோ நயங்களைக் காணலாம்; கண்டு பயன் அடையலாம். கருதுவார் மனநிலைக்கேற்பக் காட்சிதரும் பெருமை சான்ற புலவர் பெருமானார், தெய்வப் புலமை நிறைந்த திருவள்ளுவர். அவர் பாட்டில் தமிழின் இனிமை உண்டு; தத்துவத்தின் தெளிவுண்டு; வாழ்க்கையின் விளக்கமுண்டு. அவர் கவிதையில், உணர்வும் உண்மையும் ஒன்றி இருக்கும். அறத்தோடு பொருளும், பொருளோடு இன்பமும், இன்பத்தோடு அறமும் பொருந்திக் கிடக்கும், எளிமையும் இனிமையும் இணைந்திருக்கும்; ஆழமும் அகலமும் அமைந்திருக்கும். அறிவுக் கடலைக் கடைவார்க்கு ஓர் அமுதமாக விளங்கும் இத்தகைய திருக்குறளை உணர்ந்து ஓதுவார் உள்ளம், காலப்-