பக்கம்:உணர்வின் எல்லை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. வாழ்த்தும் கலை

பூவிற்கும் பல்லிதம் உண்டன்றோ? அவ்வகையில் மகாவித்துவான் மே.வி. வே. அவர்கள் மணிவிழா மலரை அணிசெய்ய எழுந்ததே இக்கட்டுரை. பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய மூன்று பெருஞ்சங்கத் தொகை நூல்களுள் வாழ்த்து ஒரு கலையாய் விளங்கும் திறத்தினை ஒருவாறு ஆராய்ந்து இன்புறுவதே இச் சிறு கட்டுரையின் நோக்கம்.

வாழ்த்துவார் வாழ்த்தின், அவ்வாழ்த்தினைப் பெற்று வரம்பிலா இன்பங் கொள்ளத் தயங்குவார் யார்? முத்தமிழால் வைதாரையும் வாழ்விக்கும் மாமுருகனை ‘வாழ்த்துவப்பான்’[1] என்றன்றோ சங்கத்தமிழ் நூலாகிய பரிபாடல் போற்றுகின்றது? ‘புகழ்ச்சி விருப்பனாய்’ எம்பெருமானே விளங்குகின்றான் எனின், பொன்னும் போகமும் புகழும் வேட்டு வாழும் மனிதர் மனநிலை பற்றிக் கூறவும் வேண்டுமோ? ‘புகழ் எனின் உயிரும் கொடுப்பது’ அன்றோ அவர்தம் பண்பு!

சங்க காலத்தில் வாழ்ந்த வேந்தர்களும் வள்ளல் கரும் புலவர் பாடும் புகழுடையோராய்—சான்றோர் வாழ்த்தும் வாழ்த்துடையராய்—வாழவே விரும்பினார்கள். தமிழ் வேந்தன் வஞ்சினம் கூறும்போதும்,


  1. பரிபாடல் 19:56