பக்கம்:உணர்வின் எல்லை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்றாட வாழ்வில் இலக்கியம்

151

திற்கு ஏற்ற எத்தனைப் புது இலக்கியங்களை உண்டு பண்ணவும் துணிகிறோம்! இல்லாவிட்டால் ‘கிறள்’கள் எப்படித் தோன்றும்!

பொதுவாக நாம் இலக்கியம் என்றால் பாட்டு என்றே கருதுகிறோம். இது தவறு; சிறந்த உரையாடலும் இலக்கியமே. சாதாரணமாக அன்றாட வாழ்வில் பேசப்படும் பேச்சுக்களிலேதான் எவ்வுளவு இலக்கியச்சுவை! வேலைக்காரியின் உரிமை முழக்கம், குழாயடியில் நடைபெறும் கொடும்போர் வீட்டு அம்மாளின் கட்டளைகள்—கோபக்கணைகள்—குழந்தைகளிடம் கொஞ்சம் மொழிகள்—அனைத்திலும் இலக்கியத்தை நுகரலாம். பொழுது விடிந்ததும் தாயின் மடியில் படுத்திருக்கும் தங்கையைத் தள்ளிவிட்டுப் பத்து வயது பையன். சோம்பல் விட்டுக்கொண்டே அன்னையின் மடியில் போய்ப் படுத்துக்கொண்டு, ‘நான் தான் குழந்தை’ என்ற ‘இன்ப முனகல்’ முனகும் போது, பெற்றவள், ' ‘ஆமாம், குழந்தை பல்லைத்தட்டி ஏணையில் போட வேண்டியதுதான்.’ என்று கூறும்போது, கம்பரும் காளிதாசரும் கிட்ட வர முடியுமோ?

அன்றாட வாழ்க்கையில் இலக்கியம், என்று எண்ணும் போது தோன்றும் ஒரு முக்கியக் கருத்து உண்டு. அன்றாடவாழ்க்கையோடு தொடர்பு கொள்ளும் இலக்கியத்தை மூவகையாகப் பாகுபடுத்தலாம் என்பதே அக்கருத்து. 1. அன்றாட வாழ்க்கைக்காக இலக்கியம், 2. அன்றாட வாழ்க்கையைப் பற்றிய இலக்கியம், 3. அன்றாட வாழ்க்கையில் எழுந்த இலக்கியம் என்பதே அப் பாகுபாடு.