பக்கம்:உணர்வின் எல்லை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

உணர்வின் எல்லை

சான்ற நூல்கள் காலத்தை வென்று விளங்கும் இலக்கியங்கள் மக்கள் உள்ளத்தை ஆட்கொள்வதற்கான வழி வகைகளைக் கற்றறிந்தார் நாளும் வளர்த்துக்கொண்டே வரல் வேண்டும்.

ஒரு பொருளின் பயனும், பெருமையும் அது பெரிய அளவில் போற்றப்படுவதிலேயே அமைந்துள்ளன. ‘மிகுந்த பயனுடையதே மிகுந்த அழகுடையது,’ என்றார் காந்தி அடிகள். எந்த ஒரு நாட்டில் அந்த நாட்டின் சிறந்த இலக்கியங்கள், அந்த நாட்டு மக்களின் வாழ்வில், பெரிய அளவில் ஊடுருவிப்பாய்ந்து பயனளிக்கின்றனவோ அந்த நாடே உயர்ந்த நாடு. அந்த இலக்கியங்களே பெயர் பெற்ற இலக்கியங்கள்.

சுருங்கச் சொன்னால், வருங்கால உலகில் இலக்கியம் அன்றாட வாழ்க்கையை அடியொற்றி எழுந்து, அதில் படிந்துள்ள தூசுகளையும் மாசுகளையும் தொலைத்துப் பொன்றாப் பெருவாழ்விற்கு வழி காட்டவேண்டும் எனலாம். அவ்வாறே அப் பொன்றாப் பேரிலக்கிய ஒளியில், மனித குலத்தின் அன்றாட வாழ்க்கை அமைந்து, வையகத்தைத் தெய்வத் திருநாடாக்க வேண்டும்.