பக்கம்:உணர்வின் எல்லை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழெயில் வென்ற இணையிலா வீரம்

167

உள் வாங்கிய பாண்டியனும், அவன் படைகளும் இவ்வேழெயில் கோட்டையுள் கரந்து அரணடைத்து ஒளித்தனர். முற்றுகையிட்டுக் கடுஞ்சமர் புரிந்தான் சோழமன்னன். அரணின் துணை கொண்டு பாண்டியனின் படைவீரர்கள் மழையெனக் கணைகளைப் பொழிந்தனர். அத்தனையும் தாங்கி, அதனினும் மிகையாக ஆண்மையையே துணைக்கொண்டு நலங்கிள்ளியின் படை, மறவர் கணைகளையும், வேல்களையும் காணும் திசையெலாம் எய்து மாற்றார் படை மருண்டோடச் செய்தது. பாண்டியன் அரண் படுகளம் ஆவது கண்ட புலிக்கொடியானின் வீரமிக்க படைவீரர் புத்தாக்கம் கொண்டு போரிட்டனர். ஏழெயிலின் நெடுநிலைக் கதவங்களைக் காவிரி நாட்டான் களிறுகள் தம் கோட்டுநுதி கொண்டு இடியெனப் பிளிறிக் குத்தியும் இடித்தும் பிளந்தன. பொன்னி வளநாட்டின் மறவரும் மழகளிறுகளுடன் போட்டியிடுவார் போல் ஏழெயில் அரண்களை ஏற்றித்தாக்கி இடித்துத் தகர்த்தனர். கோட்டை வீழ்ந்தது ; கைதவன் படைகள், சுழல்காற்றில் சிக்கிய சிறு துரும்பென அலையுண்டு, எண்டிசையும் சிதறி ஓடின. பாண்டியனும் சேரனும் தோற்றனர். இச்செய்தியறிந்த நலங்கிள்ளியின் வீரப்படைகள் எழுச்சி கொண்டு வெற்றிமுரசம் வானதிர முழக்கி, வீறுகொண்ட ஏறுகள்போல் கோட்டையின் உள் நுழைந்தன. மைந்துடை மறவர் படையினர் வெற்றி கூறினர்; வெண்சங்கை ஊதினர்; நாற்றிசையிலும் பரந்து வீசிய பொதிகைக் காற்றில் சோழ வேந்தனின் புலிக்-