பக்கம்:உணர்வின் எல்லை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

உணர்வின் எல்லை

கொடி ஆடிப்பரந்த செய்தி, செந்தமிழ் நாடெங்கணும் பரவியது. கேட்டவர் உடம்பெல்லாம் மயிர்க் கூச் செறிந்தது. ஏழெயிற் கோட்டைக்குள் ஏறுகளின் நிரையெனப் புகுந்த படையினர், தம் தலைவனின் வெற்றியைத் தரணியெல்லாம் அறியும் வண்ணம் நீளரணின் பெருங்கதவுகளிலெல்லாம் புலிப் பொறியே அழகுறப் பொலித்தனர்.

கரையிலா மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருந்த நலங்கிள்ளி, ‘பன்மீன் நடுவட் பான்மதி போல்’ பாசறைன்கண் வீற்றிருந்தான். இந்தக் காட்சியைக் காணும் பேறு பெற்றோருள் ஒருவர், நலங்கிள்ளியின்பால் போன்பும் பெருமதிப்பும் கொண்ட கோவூர்கிழார் ஆவர். சோழவளநாட்டு வேந்தன் மாறுகொண்டு எழுந்து, ஒன்னார் தேயத்தின் உட்புகுந்து, மொய்ம்புடை மடங்கலை முழையுள்ளேயே சென்று தாக்கியாங்கு, பாண்டிய வேந்தனை அவன் கோட்டையினுள்ளேயே அடக்கி ஒடுக்கிய திறன், அனைவர் நெஞ்சையும் அலைவீசும் இன்பக் கடலாய் ஆக்கிற்று. மக்கள் நெஞ்சில் கரைபுரண்டோடிய இன்ப வெள்ளம் அவரவர் மனத்தளவிலேயே நிற்க, கோவூர் கிழார் இதயம் கண்ட இன்பப்பெருக்கோ, அவர் உள்ளத்தின் எல்லையையும் கடந்து, உணர்வு மிக்க சொல்லாய் வெளிப்படலாயிற்று. அச்சொல்—அழியாச் சொல்லாய்—இலக்கியச் சொல்லாய்—புறநானூறு போற்றும் சொல்லாய் இன்றும் நமக்குக் காட்சியளிக்கிறது.