பக்கம்:உணர்வின் எல்லை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. உழவர் இலக்கியம்

பொங்கல் பெருநாள் உழவர் திருநாள். இந் நன்னாளில் உழவர் பெருமக்களால் தமிழ் நிலத்தில் நெல் விளைந்த செய்தியோடு தமிழ்ப் புலத்தில் சொல் விளைந்த செய்தியையும் சேரநினைப்பது இன்பமும் பயனும் நல்குவதன்றே ? சங்க காலம்—சமயகாலம்—சமதர்ம காலம் என்று மூன்று பெருங்காலங்கள் தமிழிலக்கிய—தமிழக—வரலாற்றை அணிசெய்வதை ஆராய்சியாளர் அறிவர். இந்தப் பெருங்காலத்தும் உழவர் வாழ்வின் எளிமையிலும் உழவின் பெருமையிலும் ஈடுபட்ட புலவர் பெருமக்கள் படைத்த பாடல்களின் சிறப்பு, இலக்கியத்தோடு வாழ்வையும், வாழ்வோடு வரலாற்றையும் இணைத்துக் காணவல்லார்க்குப் பெருமகிழ்வு தருவதாகும்.

சங்க காலம்

பழந்தமிழ் இலக்கியங்களாகிய சங்க நூல்கள் தமிழகத்தில் மன்னராட்சி தலைசிறந்து விளங்கிய காலத்தில் தோன்றியவை. எனவே அந்நூல்களில் முடிகெழு மூவேந்தரும், குறுநிலத்தலைவரும், வள்ளல்களும் பெரிதும் சிறப்பிக்கப் பெற்றிருத்தலைக் காணலாம். ஆயினும் அக்கால இலக்கியங்களிலேயே ஏழை எளியவர்களும், உழைப்பாளிகளும், பாட்டாளிகளும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் இல் லாமல் சமுதாயம் முழுமை பெறாதன்றோ ?