பக்கம்:உணர்வின் எல்லை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 பூமிக்குப் பாரம்;
சோற்றுக்குக் கேடு

பழமொழிகள் ஒரு நாட்டின் அரிய பெருஞ்செல்வம். அதன் சிறப்பை உணர்ந்த நல்லறிஞர் தம் இலக்கியப் படைப்புக்களில் பழமொழிகளைப் பண்பறிந்து போற்றிப் பயன் கொள்ளல் கண்கூடு. அந்த வகையில் வள்ளுவப் பெருந்தகையாரும் தம் தெய்வத்திருநூலில் பழமொழிகள் பலவற்றை எடுத்தாண்டு சிறப்பித்துள்ளார். வள்ளுவர் தெள்ளு தமிழ் மறையில் எடுத்தாண்ட பழமொழிகளில் ஒன்று 'பூமிக்குப் பாரம்; சோற்றுக்குக்கேடு' என்பது, பயனற்ற மனிதவாழ்க்கை , பூமிக்குப்பாரம் சோற்றுக்குக்கேடு' என்பதே இவ்வாசகத்தின் உட்பொருள். இந்த உண்மையை உணர்ச்சியுடன் வெளியிடும் இந்தப் பழமொழியில் ஈடுபாடு கொண்ட வள்ளுவப் பெருந்தகையார், தம் நூலுள் பல இடங்களில் இப்பழமொழியின் ஒளிபடருமாறு செய்துள்ள நயனும், பயனும் அறிந்துபோற்றற்குரியன.

சமுதாயத்தில் உள்ள தீமைகளுள் மிகவும் கொடிய ஒன்று புறங்கூறல். இக்கொடிய நோய்க்கு இரையாகி வாழ்வதைவிட இறப்பதே மேல் என்பது வள்ளுவர் கருத்து, புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழும் வாழ்வின் இழிவையும்,