பக்கம்:உணர்வின் எல்லை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூமிக்குப் பாரம்; சோத்துக்குக் கேடு

191

(சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு, புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்-டாக்டர் மு.வ.)

‘பூமிக்குப் பாரம்’ என்று இருப்போரைப் பற்றிப் பேசிய வள்ளுவர் ‘சோற்றுக்குக்கேடு’ என்று இருப்போரைப் பற்றியும் குறிப்பிடுகிறார். வறுமையின் கொடுமையை விளக்கிக் கல்நெஞ்சையும் கரைக்கும் ‘நல்குரவு’ என்ற அதிகாரத்தில், உப்பிற்கும் காடிக்கும் எமனாய் இருப்போரைச் சுட்டிக் காட்டுகிறார். வறுமையால் மனிதனுக்கு நேரும் பேரிழப்பு அவன் உயிரினும் சிறந்த மானம் அவனைவிட்டுக் காற்றில் பறப்பதே. உண்ணுவதற்கு-நுகர்வதற்குப் பொருள்கள் இல்லாதார் உண்மைத் துறவு —வாழ்க்கைத் துறவு—கொள்ளவேண்டும்; இல்லையேல், பிறர் வீட்டில் உள்ள உப்பிற்கும் காடிக்கும் காலனாகும் ‘வாழ்வு’ அவர்கட்குக் கிட்டும். மானம் கெட்ட அந்த வாழ்வும் ஒரு வாழ்வா! அன்று; சோற்றுக்குக்கேடே! இவ்வுண்மையை,

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று
1050)

என வரும் குறளால் குறிக்கின்றார்.

(நுகரும் பொருள் இல்லாத வறியவர். முற்றுந் துறக்கக்கூடியவராக இருந்தும் துறக்காத காரணம் உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும் -டாக்டர். மு. வ.)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்! வள்ளுவர்க்குப் பழமொழியும் வயிரப்படை!