பக்கம்:உணர்வின் எல்லை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வையையின் வளம்

193


கின்றன. விரிந்த பொலிவினை உடைய ஆற்றலைக் குறையிடத்து அடிப்பக்கம் அகன்று, பல மலர்களால் உயர்ச்சியும், ஒன்றோடு ஒன்று ஒத்து விளங்கிய குவிந்த மணற்குன்றங்கள் அத்தாயின் கொங்கைகளாய்த் தோன்றுகின்றன. கண்களின் உதிர்ந்து கிடக்கும் முருக்க மலர்களின் செய்மை, அம்மையின் சிவந்த செவ்வாயாய் விளங்குகின்றன. அருவி நீரோடு கலந்து வந்த அழகிய முல்லை மலர்கள் அவள் முறுவலைக் காட்டுகின்றன. கறுக்கே மறித்தும், நெடுக ஓடியும் திரிகின்ற பெரிய கயல் மீன்கள் அன்னையின் கண்களாய் அமைகின்றன. வாசனை பொருந்திய மலர்கள் நீங்கப் பெறாது விளங்கும் கரிய அறல் மணற், அக்காரிகையின் பெரிய கறுத்த கூந்தல். இத்தகு 'மங்கள நல்லணி' கோலம் கொண்ட அம் மாதரசியின் ஒழுக்கமோ உலகைக் காத்து ஊட்டி வளர்க்கும் உயர்பேர் ஒழுக்கம். ஒழுக்கம் உடையார் புகழுக்கு எல்லையுண்டோ ? அவள் 'புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி'. அப்படியா? அவள் பெயர்? 'வையை என்ற பொய்யாக் குலக்கொடி' ஆ ! வையை! மதுரை மாநகரையும் பாண்டிப் பெரு நாட்டையும் மகவாய் வளர்க்கும் தாய்!

இதோ ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு அவளைப் பற்றி இளங்கோ அடிகள் படைத்த இலக்கியச் சித்தரம்.

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகரும் திலக்கும் சூதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்

13