பக்கம்:உணர்வின் எல்லை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கோ கூறும் ‘என் கதை’

197

வேந்தன் செங்குட்டுவன், பிற மன்னரிடம் திறைபெற்று மகிழ்ந்து வீற்றிருந்தான். அந்த நேரத்தில் அரிவையர் நால்வர் அங்கு வந்தனர். அவர்கள் தேவந்தி, காவற்பெண்டு, அடித்தோழி, ஐயை என்போர் ஆவர். அவர்களுள் முதல் மூவரும் சோழ நாட்டின் தலைநகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ; கண்ணகி நல்லாளோடு நெருங்கிய உறவு பூண்டவர்கள். பொழுது புலராமுன் பூம்புகாரை விட்டு நீங்கிய கோவலன் கண்ணகி வாழ்வை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தவர்கள்.

ஒருநாள் மாடல மறையோன் வாயிலாக அவர்கள் கேட்ட செய்தி, அவர்கள் இதயத்தை இடியெனத் தாக்கியது. ‘கோவலன் ஆராயாமற்கொலை செய்யப்பட்டான். அதை அறிந்து, அவன் வீரபத்தினி பொங்கி எழுந்தாள். அதன் விளைவாக பாண்டிவேந்தன், ‘யானோ அரசன்?’ யானே கள்வன்!’ என்று மனங்குமுறி உயிர் இறந்தான். இச்செய்தி விளக்கத்தை மாடலன் வாயிலாகப் பெற்ற அம்மகளிர். மதுரை மாநகர்க்குச் சென்றனர். அங்கே சென்ற அவர்கட்கு, மதுரை எரியுண்ட செய்தியும், தன்பால் அடைக்கலமாய் வந்தவர்கட்குத் தீங்கு நேர்ந்தமையால், ‘இடையர் குலத்து மக்களே! அடைக்கலப் பொருள். இழந்தேனே! அரசன் செங்கோலும் வெண்குடையும் தவறு இழைத்தனவோ?’ என்று அலமந்து நள்ளிரவில் தீப்பாய்ந்தாள் மாதரி நல்லாள் என்ற செய்தியும் ‘வரவு’ கூறின.