பக்கம்:உணர்வின் எல்லை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

உணர்வின் எல்லை

என்று ஆறாத்துயர் அடைந்து மாதரி மாண்டாள் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினைச் செங்குட்டுவன் பெற்றான். அதன் காரணமாகச் செங்குட்டுவன் முதலில் மணிமேகலையின் துறவு வரலாற்றைத் தேவந்தி வாயால் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அரசர் பெருமானுக்குத் தேவந்தி இளம் பருவத்திலேயே மணிமேகலை இன்ப வாழ்வைத்துறந்து கடுந்தவம் மேற்கொண்ட செய்தியை உணர்ச்சியோடு கூறிக்கொண்டிருந்தபோது அவளுக்குத் தெய்வ ஆவேசம் வந்து விட்டது. அப்போது தேவந்திமேல் ஆவேசித்த பாசண்ட சாத்தன் இட்ட கட்டளையின் வழி, அங்கிருந்த மாடல மறையோன், தன் கை உறியிலிருந்த தெய்வத் தன்மை வாய்ந்த நீரைக் கண்ணகி கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்த இளமகளிர் மூவர்மீது தெளித்தாள். உடனே அவர்களது முற்பிறப்பு உண்மை விளங்கற்று. அம்மூவரும் போன பிறப்பில் கண்ணகி தாய், கோவலன் தாய், மாதரி என்பதையறிந்த செங்குட்டுவன் பெருவியப்பு அடைந்தான். அவன் வியப்பை உணர்ந்த மாடல மறையோன், அவர்கட்கு அப்பிறப்பு வாய்த்த வரலாற்றை விரித்து உரைத்தான்! அதை அறிந்து அகமிக மகிழ்ந்த செங்குட்டுவன் கண்ணகி கோயிலுக்கு அருச்சனை முதலியன நாளும் தவறாமல் நடைபெற, வரியில்லாமல் இறையிலி நிலம் விட்டு ஏற்பாடு செய்தான். தினமும், தெய்வ வழிபாடு நிகழ்வதற்கான கட்டளைகளைச் செய்தான்.