பக்கம்:உணர்வின் எல்லை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

உணர்வின் எல்லை

கண்ணகிக்கும் மண்ணுலக வாழ்வில் இருக்கும்வரை அடிகளாரின் சரிதையை அறிந்து கொள்ள ஏது ஏதும் இல்லை. எனவே தெய்வமாய் ஆன நிலையில் தான் கண்ணகி தேவி கடந்த கால நிகழ்ச்சிகளை விண்ணுலக வாழ்வில் தெரிந்து கொண்டு, தேவந்தி வாயிலாகக் கூறித் துறவியர் பெருமானே மகிழ்வித்திருக்க வேண்டும். அற்புதத்தை நம்பாதவர்கட்கு இது அதிசயமாகலாம்; ’கலையுரைத்த கற்பனே’யாகவே தோன்றலாம். உண்மை எவ்வாறயிருப்பினும் இளங்கோ அடிகளின் வரலாற்றை அவர் வாயாலேயே கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்து விடுகிறது. கலையும், வரலாறும், சமயமும் கலந்தால் கிடைக்கும் ‘கூட்டுக்களி’ இன்பமும், நம் இதயவீட்டை நிரப்பிக் கொள்கிறது. அம்மட்டோ? நாம் ஆர்வமுடன் படித்த ஒரு பெருங்காப்பியம் ஐயாயிரத்தொரு வரிகள்—வெறுங் கற்பனேயல்ல—வரலாற்று அடிப்படைமேல் வானுயர எழுந்த காவியப் பெருங் கோயில் என்ற உண்மை நம் உள்ளத்தில் ஒளி வீசும். அவ்வொளியின் பயனாய்ப் பத்தினி கோட்டத்துள்—காவியக் கோயிலுள் — கொலுவிருக்கும் அன்னையின் — கண்ணகி தெய்வத்தின் — காலடிகளில் நம்மையும் அறியாமல் நாம் வீழ்ந்து வணங்கி வாழ்த்துவோம். அப்போது, இளங்கோ கூறும் ‘என் கதை’ ‘சுவை நிறைந்தது; பயனும் செறிந்தது,’ என்று காவியக் கோயிலின் மணியோசை கணீரென்று முழங்குவதும் நம் காதுகளில் ஒலிக்கும்.