பக்கம்:உணர்வின் எல்லை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

உணர்வின் எல்லை

கவிஞர்களின்—துறவிகளின் தனிப்பண்பு அது. பாரதியார் எல்லோரையும் ‘சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்,’ என்று அழைக்கின்றார். ஆனால், பாரதியார் ஒரு வேண்டுகோள் மட்டும் செய்துகொள்கிறார்.

‘செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
      சேர்த்தித் தேவை வணங்குவம் வாரீர்;
வந்த னம்வெட் கேசெய்வ தென்றால்
      வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்;
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
      வரிசை யாக அடுக்கி யதன்மேல்
சந்த னத்தை மலரை யிடுவோர்.

      சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.’

எனப் பணித்தல் காண்க.

இன்று நாம் போற்றிப் புகழும் பாரதியார், கலைமகளை வழிபடப் புத்தம் புதியதொரு முறையைக் கற்பிக்கிறார்; கலைமகளின் கருணையை விரைந்து பெற வழிகாட்டுகிறார். கவிஞர் காட்டும் வழியில் வழாது நடக்க வேண்டுவது நம் கடமையன்றோ ? அன்றேல், பாரதியாரைப்போற்றுவதிலே-புகழ்ந்து பேசுவதிலே பயன் என்ன? பாரதியார் கேவலம் புகழுக்காகக் கவிகளைப் பாடவே இல்லை. செந்தமிழ் நாட்டினர் அந்தமில் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழவே தம் வாழ்நாளைத் தத்தஞ் செய்தார்; மக்கள் மனத்திலே என்றும் நின்று நிலவி ஊக்கும் வண்ணமே மதுரத் தமிழ்க் கவிகள் பாடினார்.