பக்கம்:உணர்வின் எல்லை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உணர்வின் எல்லை

தான் பெற்ற பிள்ளை பசியால் வெந்து மடிய, அதை மறந்து, தன் வயிற்றுக்கு உணவு தேடித் தின்கிறாளாம் ஒரு தாய். என்ன கொடுமை!

‘பன்னீ ராண்டிப் பதிகெழு நன்னாடு,
மன்னுயிர் மடிய மழைவளங் கரந்தீங்
கின்றாள் குழக் கிரங்காள் ஆகித்
தான் தனித் தின்னுத் தகைமைய தாயது’!

(காதை -25; 101-4)

இவ்வடிகள், சிலருக்குச் சாத்தனாரின் கற்பனையாகப் படலாம். ஆனால், நாமே கண்ட வங்காளப் பஞ்சம், ‘இது கற்பனை அன்று; வரலாறு;’ என்று எச்சரிக்கிறது.

பசிக் கொடுமையின் எல்லையைத் தன் வாழ் நாளிலேயே கண்டாள் மணிமேகலை, அவள் அன்பு மனம், அனலில் இட்ட மெழுகாய் உருகியது. விளைவு என்ன? பிச்சைப் பாத்திரம் ஏந்தினாள்; பெருந் துன்பங்கட்கு ஆளானாள். அதுமட்டுமா? எலிசபெத்து பிரை போன்ற பெண்மணிகளும் சிறைச்சாலைகளைச் சீர்திருத்தத்தான் முன் வந்தார்கள். ஆனால், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழகம் ஈன்றெடுத்த மணிமேகலையோ, அந்நியாக் கொடுஞ்சிறையை அரசன் ஆணை கொண்டே அழித்தாள்; ‘கறையோர் இல்லா’ அறவோர் கோட்டமாக அச்சிறைக்கோட்டம் விளங்கச் செய்தாள். ஆனால், தன் விருப்பு வெறுப்புகட்கு நாட்டின் ஆட்சியை இரையாக்கும் கோனாட்சியின் கொடுமையால் சிறைப்பட்டாள்.