பக்கம்:உணர்வின் எல்லை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடுக பாட்டே!

27

அவளருகே அமைதியாக—ஆனால்—வருத்தத்தோடு உட்கார்ந்திருக்கின்றாளே மற்றொருத்தி, அவளே, ‘தலைவி’யைக் கண்ணும் கருத்துமாக—உணர்வைப் போற்றுங்கவிஞன் போல-நாளொரு மேனியாகப் போற்றி வளர்த்த செவிலித்தாய். பரபரப்புடன் குறி சொல்லும் கிழவியை அழைத்து வந்து முற்றத்தில் உட்கார வைக்கின்றாளே, அவளே தலைவியின் உயிர்த் தோழி. தலைவியின் வாயும் மனமும் அவளே என்று சொல்லிவிடலாம். தலைவியின் உள்ளம் அவள் ஒருத்திக்குத்தான் தெரியும்.

செவிலித்தாயும் நற்றாயும் தலைவியின் மனவேறுபாட்டின் விளைவான முகவேறுபாட்டைக் கண்டு உள்ளம் நோகின்றனர். ஆனால், தலைவியின் ‘நோய்’ என்னவென்பது அவர்கட்குத் தெரியவில்லை; நோயைத் தெரிந்துகொள்ளாததால் மருந்தும் புலனாகவில்லை.

காதலைப்பற்றி என்னென்னவோ உயர்வாகப் பேசுகின்றார்கள்; ஆனால், தலைவியைப் பொறுத்த மட்டில் ‘காதல்’ நெருப்பாகத்தான் இருந்தது. அவள் உள்ளத்தை எவனோ கவர்ந்துவிட்டான்; கவர்ந்த அவனையே அவள் உள்ளம் தேடிக்கொண்டிருந்தது. ஆனால், இந்த உண்மையை அவள் யாரிடத்தில் சொல்ல முடியும்? உண்மையை-அதுவும் காதல் பற்றிய உண்மையை–சொல்வது. அவ்வளவு எளியதா? ஆனால், உண்மையைத் தாயிடம் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஏன்?