பக்கம்:உணர்வின் எல்லை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

உணர்வின் எல்லை

தேறலைச் சின்னஞ்சிறு கலத்து ஊற்றி வைத்து, ‘அதிகமான் ஏற்றுக் கொள்வான்!’ என்று நம்பிப் படைக்கின்றனர். பேதைமை! அவனுக்கு அச்சிறு கலத்துக் கள்ளோடு நாட்டையும் மலையையும் சேரக் கொடுத்தாலும் கொள்ளவா போகிறான்? ஐயோ ! அப்படி நினைப்பதுதான் அறிவாகுமா? அதிகமான் பார்? பாடி வந்த புலவர்க்கெல்லாம் பரிசிலாக நாட்டையும் மலையையும் வழங்கிய பின்னரும் அமைதி பெறாத கலையுள்ளம் படைத்த வள்ளல் அல்லனா? அது மட்டுமா? புலவர்க்கு என்றால் தன் உடைமை எல்லாம் கொடுக்கத் துணிவான்; செறுவரை நோக்கிய கண், தன் சிறுவனை நோக்கினாலும் மாருத சிவப்புடைய வீரன் அவன். ஆனால், மண்ணசை—மலையாசை பிடித்தவன் அல்லன்; ‘ உண்டாயின் பதங்கொடுத்து, இல்லாயின் உடன் உண்னும்' உத்தமன் போரில் வெற்றி கண்ட பின்னர், நேற்றுப் பகைவராய் இருந்தவர் இன்று அடிபணிந்து, ‘நாடும் பாலையும் திறையாகத் தருகிறோம்,’ என்றாலும் அவற்றைக் கொள்ளமாட்டான். ஏன் தெரியுமா? அவன் போரிட்டதெல்லாம் மானத்திற்காக வீரத்திற்காகத்தான்; மண் வெறியால் அன்று. அவன் வாழ்வும் வரலாறுமே அதற்குச் சான்று.

‘கோடுயர் பிறங்குமலை கெழீஇய

நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே.’

என்னும் அடிகள் இக்கருத்தையெல்லாம் நமக்கு நினைவூட்டுகின்றன. இனி முழுப் பாடலையும் பார்ப்போம்: