பக்கம்:உணர்வின் எல்லை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

உணர்வின் எல்லை

தான். அந்த அன்பை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் காணத்துடித்தது அவர்கள் நெஞ்சம். சிறப்பாக அவ்வன்பின் முதிர்ச்சியைக் காதல் வாழ்வில் காண விரும்பினார்கள்; கண்டார்கள்; கண்டு களித்து வாழ்ந்துவந்தார்கள். அவ்வாறு அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை—வான் மறையாய—காவியமாய்—நாம் மட்டுமன்றி வையகம் எல்லாம் துன்பக் கடலின் நீங்கி இன்பக்கரை ஏற ஒளிகாட்டும் ஒப்பற்ற கலங்கரை விளக்கமாய்த் திகழ்கிறது.

அத்தகைய தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதிகளே அவர்கள்! அதோ அந்த வீரன் கையில் விளங்குவது வேல். குருதிக் கறை படிந்த அவ் வேலின் கூர்மையையும்—அக்கூர்வேல் தாங்கிய தலைவன் திருமுகத்தையும் மாறி மாறிப் பார்த்து மகிழ்கின்றாள் அம்மங்கை. அவனோ, தன் கை வேலின் கூர்மை எல்லாம் அவள் கருவிழிகளில் விளங்கும் அருமையையும், அவ்வழகைத் தான் காணுந்தொறும் அவள் தலை கவிழ்ந்து நிலனோக்கி நாணும் அழகினையும் மாறி மாறிக் கண்டு பூரிக்கின்றான். இவ்வாறு கண்களால் கண்டு களித்தும், அறல்போலும் அவள் கூந்தலில் அழகு மலர்கள் பல சூட்டி அக மகிழ்ந்தும் இருந்த அவ்வன்புச் செல்வர்களின் உள்ளமும் உடலும் பூரிக்கப் பால் மதியம் முகில் திரைகளைந்து மெல்லத் தோன்றி ஒளி பரப்பல் ஆயிற்று. அவ்வழகிய காட்சியைக் கண்ட காதலர் நெஞ்சம் இன்பக் கடலாயிற்று. ‘எழில்