பக்கம்:உணர்வின் எல்லை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லவள்

43

போல்வாள்! ஒன்றும் தெரியாதவளா அவள்? இல்லை—இல்லை. பெரிய திருடி! என் உள்ளத்தைத் திருடவும் அவளுக்குத் தெரியும்! திருடியதை யாரும் அறியாமல் ‘திறமை’ எனும் திரையிட்டு மறைத்துக் காக்கவும் அவளுக்குத் தெரியும். ஆம்!ஆம்! இரண்டும் தெரிந்த திருடி! அதனால் அன்றோ இப்படி இருக்கின்றாள்? ஆம்! நம் தலைவி உள்ளத்திற்கும் உறவிற்கும் நல்லவளே; ஆனால், ஊருக்கும் உலகத்திற்குமோ வல்லவள் ! மிக வல்லவள்!

‘இரண்டறி கள்விநம் காத லோளே!
முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து
தன்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்தள் ஆகித்
தமரோ ரன்னன் வைகறை யானே!’
-குறுந்தொகை 312

[முரண்-மாறுபாடு; துப்பு-வலிமை; மலையன்-மலையமான் திருமுடிக்காரி ; ஓரன்னள்---ஒருதன் மையள் ; வைகறை-விடியற்காலம்; கதுப்பு-கூந்தல் ; நீவி-துடைத்து; அமரா முகத்தள் ஆகி-விரும்பாத முகத்லதயுடையவளாகி.]

***

கட்டுரை முடிந்தது. ஆனால், என் கவிதை மயக்கம் மட்டும் நீங்கவில்லை. பாட்டைத் திரும்பத் திரும்பப் பாடிய வண்ணம் இருந்தேன். யாரோ உரிமையோடு என் அறையுள் நுழைவது கண்டேன்.