பக்கம்:உணர்வின் எல்லை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

உணர்வின் எல்லை

லாளை, ‘நாடகமேத்தும் நாடகக் கணிகை’ என்றே இளங்கோ அடிகள் குறிப்பிடுகின்றார். பழந்தமிழ் நாட்டில் அகக்கூத்து, புறக்கூத்து, சாந்திக்கூத்து, மெய்க்கூத்து, அவிநயக்கூத்து, நாடகக்கூத்து, வினோதக்கூத்து, குரவைக்கூத்து, கழாய்க்கூத்து, குடக்கூத்தி முதலிய பல்வகைக் கூத்துக்கள் சிறப்புற்றிருந்தன என்பதும், அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை ஆகிய ‘பதினோராடல்கள்’ பொலிவுற்றிருந்தன என்பதும் சங்க நூல்களாலும், இயல் இசை நாடகக் காப்பியமாகிய சிலப்பதிகாரம் முதலியவற்றாலும், அவற்றின் உரை நூல்களாலும் இனிது விளங்குகின்றன.

இசையும் அபிநயமும் பொருந்திய கூத்தை ஆடவும், நாடகங்களை நடிக்கவும் பழந்தமிழ் நாட்டில் சிறந்த நாடக மேடைகள் விளங்கின. நாடக மேடையை நலமுற அமைப்பதையே ஒரு தனிக் கலையாகத் தமிழர் போற்றினர் என்பது மிகையாகாது. சிற்ப நூல் வல்லார் வகுத்த விதிகளினின்றும் வழுவாத வகையில் அந்நாளில் நாடக மேடைகள் நிறுவப்பட்டன. பழந்தமிழ்ப் பாட்டொன்று வாயிலாகத் தெய்வத்தானம், அறவோர். பள்ளி, போர் புரியும் இடம், சேரி, யானைக் கூடமும் குதி ரைச்சாலையும் இருக்குமிடம், பாம்புப் புற்று முதலிய இடங்களில் நாடகச் சாலைகளை அமைக்கமாட்டார்கள் என்பது தெரிகின்றது. மேலும், ஊரின் நடுவே தேரோடும் வீதிகளின் எதிர்முகமாக நாடக