பக்கம்:உணர்வின் எல்லை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடகக்கலை

87

அரங்குகள் நிறுவப்பெறும் என்பதும், ஏழுகோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒரு கோல் குறட்டு உயரமும், குறட்டிற்கு மேல் நான்கு கோல் உயரமும் உடைய ஆடரங்குகளைச் சமைப்பார்கள் என்பதும், அவ்வரங்குகளிலே அமைக்கப்பெற்ற விளக்குக்களால் ஏற்படும் தூண்களின் நிழல் அவைக்களத்திலோ, அரங்கத்திலோ விழாதவாறு திறம் பெற அமைக்கப்பெறும் என்பதும் சிலப்பதிகாரம் என்ற செந்தமிழ்க் காவியத்தால் விளங்குகின்றன. ஆடரங்குகளை அளந்து அமைப்பதற்குப் புண்ணிய மலைச்சாரலில் ஓங்கி வளர்ந்த மூங்கிலில் கணுவுக்குக் கணு ஒரு சாண் இடைவெளி உள்ளதாய், உத்தமன் ஒருவன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்டதாய் உள்ளதொரு கோலைப் பயன்படுத்துவார்கள் என்பது தெரிகின்றது.

பழந்தமிழ் நாட்டில் அரண்மனையைச் சார்ந்த நாடக அரங்கிற்குக் ‘கூத்தப் பள்ளி’ எனவும், கோயிலிலுள்ள கூத்தாடுமிடத்திற்குக் ‘கூத்தம் பலம்’ எனவும் பெயர் வழங்கினவெனக் கூறுவர். நாடகமாடும் தலைமையிடம் ‘அரங்கு’ என்றும், ‘நாயகப்பத்தி’ என்றும் வழங்கப்பட்டது. நாடகம் காண்போர் வீற்றிருக்கும் இடம் ‘அவை’ எனக் குறிப்பிடப்பட்டது. நாடகம் பார்க்கும் அவையில் மன்னரும் அவரைச் சார்ந்தோரும் இருத்தற்கு அரங்கின் எதிரே தனியிடம் அமைந்திருந்தது. கூத்தாடுபவர்கள் அவையோர் கண்ணுக்குப் புலனாகா வகையில் அரங்கிற்குள் செல்லுவதற்கான