பக்கம்:உணர்வின் எல்லை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடகக்கலை

89

வைக்கப்பெற்ற வண்ணத்திரைச் சிலைகள் இருந்தன என்பதும் புலனாகின்றது. நாடகமேடையை நண்ணிக் கூத்தாடும் முறை முதலியவைபற்றி விரி வான விளக்கங்களைச் சிலப்பதிகார அரங்கேற்று காதையிலும், அதன் உரையிலும் காணலாம். பழங் காலத்தில் கூத்தர்கள் கூத்தாடும் காலத்தில் செல்வராய் உள்ள பிறரிடமிருந்து வாங்கப்பெற்ற அணிகளைப் புனைவர் என்ற செய்தி, ‘ஆடுங்கூத்தர் அணியே போல வேற்றோர் அணியொடு வந்தீரோ’ எனவரும் மணிமேகலை அடிகளால் விளங்குகிறது. சாத்தனூர் செய்த இப்பெருங் காப்பியம் வேறோர் இடத்தில், ‘நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்’ என்று குறிப்பிடுகிறது. இக்குறிப்பு வாயிலாக ஏறத்தாழக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டுவரை நாடகத் தமிழ் தன் தாயகத்தில் பெற்றிருந்த சிறப்பின் தன்மையை ஒருவாறு உணரலாம். இத்தகு பெருமை வாய்ந்திருந்த நாடகத் தமிழ், இயல் இசை போலவே சிலப்பதிகார மணிமேகலை காலத்திற்குப்பின் தன் வளர்ச்சி குன்றி மங்கலாயிற்று என்றே கூறத் தோன்றுகிறது. ஆயினும், தமிழ் நாட்டில் நாடகக் கலை முற்றிலும் அழிந்து போகவில்லை. ‘நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே,’ ‘நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து’ என்பன போன்று வரும் பற்பல திருமுறை மொழிகளால், தேவார திருவாசககாலத்திலும் தமிழ் நாடகக் கலை ஒருவாறு உயிர்பெற்று விளங்கியமை புலனாகின்றது.