பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2 லா. ச. ராமாமிருதம்


நாள் கிழமைகளில் என் தாயை தான் நமஸ்கரிக்கையில் அவளைக் கேட்டுக்கொள்வதுண்டு "அம்மா என் இறுமாப்பு வளரவேணும் என்று ஆசீர்வதி!"

இப்படிக் கேட்கையில், எப்பவுமே நல்லெண்ணத்தில் கேட்கிறேன் என்று சொல்வதற்கில்லை.

நான் வெளிச்சமானவன் இல்லை.

‘ராமாமிர்தத்துக்கு மனசில் ஒன்றும் வைத்துக்கொள்ளத் தெரியாது’ என்று என்னோடு பழகியவர்கள் சொல்லமாட்டார்கள். அந்த முறையில் நான் நல்லவன் இல்லை. நான் அறிந்தே, என் நெஞ்சில் எவ்வளவோ, பூட்டியும் புதைத்தும் வைத்திருக்கிறேன். தான் அறியாமல் இன்னும் எத்தனையோ.

இரு பொருள், ஏன், பல பொருள்பட ஒரு வார்த்தைவெறும் சிலேடை அல்ல-நாலுபேருக்கு நடுவில், வெளிக்கு நமஸ்காரமாய் அமைந்து, ஆனால் குறிப்பிட்டவனுக்கு மாத்திரம், அவன் நெஞ்சில் தைத்து நடுங்கும் அஸ்திர வேலைப்பாடுகள்-எனக்கு எப்பவும் அலுத்ததில்லை.

எனக்கு ஒரு கனவு. ஒருநாள், என்றேனும் ஒரு நாள், சொல்லாட்சியால், பொருளுக்கும் சொல்லுக்கும் இடைக் கோட்டை அழித்து சொல்லே பொருளாய், பொருளே சொல்லாய், ஆனால் ஒன்றுக்கொன்று குழம்பாது, ஒன்றுக் கொன்று பக்கபலமான நிலையை எய்தல் வேண்டும்.

அப்புறம் சொல்லேதான் செயல், செயலேதான் போருள்.

நெருப்பு என்றால் வாய் வேகவேண்டும்.

இது முடியுமா? ஆயுசுக்குள் முடியுமா? அப்புடி முடிந்து தான் ஆகவேண்டுமா? முடிந்தாலும் அதனால் கானப் போவது என்ன? கேள்விகள் தாமே எழுகின்றன.