பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 லா. ச. ராமாமிருதம் அப்போது யாரோ பாடும் குரல் கேட்கிறது. ஆண் குரல். ஹிந்துஸ்தானி சங்கீதம். "கஜல்.’’ இடையிடையே நீண்ட தொகையறாக்கள். குரலோடு இழைந்து இழைந்து பத்து ஸாரங்கிகள் அழுகின்றன. திடீரென்று தபேலாவின் மிடுக்கான எடுப்புடன், ஆரம்ப அடியில் பாட்டு முடியும் போதெல்லாம், இன்பம் அடிவயிற்றைச் சுருட்டிக்கொண்டு "பகீர் பகீர் என்று எழும்புகிறது, அந்தமாதிரி குரலை நான் கேட்டதேயில்லை. என் எலும்பெலாம் உருகிவிடும் போலிருக்கிறது. நான் அதைத் தேடிக்கொண்டே போகிறேன். நான் போகிற வழியெல்லாம், யார் யாரோ மேடுகளிலும் பள்ளங்களிலும், மரத்தடிகளிலும், பரந்த வெளிகளிலும், கூட்டம் கூட்டமாயும், கொத்துக் கொத்தாயும் . தனித் தனியாயும், அசைவற்று உட்கார்ந்திருக்கிறார்கள் நான் போகப் போக, பாட்டின் நெருக்கமும், இமையும் இந்த உடல் தாங்கக் கூடியதாயில்லை. பாடும் ஆளும் தென்படுவதாயில்லை. எதிரே கட்டிடமு. மில்லை. ஒரே பரந்த வெளிதான். ஆனால் குரலின் கண கணப்பும் தீர்க்கமும் இனிமையும் ஒரே இரைச்சலாய் வீங்கி என்மேல் மோதுகையில் எனக்கு ஏற்பட்ட தவிப்பு தாங்க முடியவில்லை. திகைப்பூண்டு மிதித்த மாதிரி கடைசியில் என்னையே நான் சுற்றி வருகிறேன். அப்பொழுது என்னி லிருந்தே அக்கீதம் வெளிப்படுவதாய்க் காண்கிறேன். கண்டதும் விழித்துக்கொண்டேன். இது தான் நான் கண்ட கனா. இன்னும் என் கனவுகளில் பாடும் குரல் துரத்திலிருந்து வருகிறது. எனக்கு எதையோ ஞாபகப்படுத்துவது போல், நிச்சயப்படுத்துவது போல். இந்த என்னைப் பற்றித்தான் இது. அதாவது , உன்னைப் பற்றித்தான்,