பக்கம்:உத்தரகாண்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    101

வீடுகள்ள நான் பத்திரமா சேக்குறேன்? ஏன் பயப்படுறீங்க?... தாலியா கட்டுறானுவ?”... அடிவயிற்றிலிருந்து கிளர்ந்து வந்தது. அந்தக் குழந்தைகளை அவள் அன்று நடத்திக் கொண்டு வீடுகளில் சென்று சேர்த்தாள். ஆங்காங்கு போக்கற்ற விடலைகள் நின்று கொண்டிருந்தார்கள். எங்கே பார்த்தாலும், சுவர்களில் தட்டிகளில் கரிக்கோட்டால் இந்தி அரக்கி! போட்டு அடிப்பதுபோல் படம். திரும்பி வரும் போது, கொடும்பாவி கட்டி இழுத்துக் கொண்டு, தேனாம்பேட்டைச் சந்தொன்றில் கோசம் போட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும், இந்திக்குப் பாடை; தமிழுக்கு மேடை; தமிழுக்கு உயிர்; இந்திக்கு மயிர் என்பது போல் கொச்சையான வசவுகளும், எதிர்ப்பதங்களுமாகச் சுவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டிருந்தன. தேசியக் கொடிகளும்கூட கவுரவம் பெற்றிருக்கவில்லை.

கப்பலே கவிழ்ந்த துயரத்துடன் திரும்பி வந்தாள். அடுத்த வாரம் பஞ்சமி வந்த போது, இவள் கண்ணீர் வடித்தாள். இந்தித் தீ, மாநில மெங்கும் பற்றி எரிந்தது.

“எம்மா, உங்கப்பாரு, திருட்டுச் சாராயத்தக் குடிச்சிட்டு இப்பிடிப் பின்பக்கமா நுழைவாரு. ‘இப்பிடி பால் வாத்த இடத்துல நஞ்சக் குடிச்சிட்டு வரீங்களே’ன்னு அடிச்சிப்பேன். போலீசு புடிச்சிட்டுப் போயிடும். “தாயம்மா, போ, ஜாமின் கட்டிட்டுக் கூட்டியா”ம்பாரு. கடசில அஞ்சும் குஞ்சுமா விட்டுட்டுச் செத்தாரு. உங்க மூணு பேரையும் இந்த நிழல்லதா வளர்த்தேன். அவன் எப்படி இப்படியானான்?

இங்க வந்தா, “இதென்ன சோறு, மனிசன் திம்பானா? இந்த வீட்டுல, ஒரு “பண்டம் ருசியா, கிடையாது. சாதில பெரிய... அய்யிருன்னு நெனப்பு. இங்க யாரும் உசந்ததில்ல. எல்லாம் கோழியடிச்சி, ஆடடிச்சிக் கறி தின்னவங்க. வேசம் போடுறாங்க. எங்கப்பாரே உன்னாலதா செத்தாருன்னு எல்லாரும் சொல்றாங்க” என்று கத்திக்கச்சை கட்டினான். மீசை அரும்பித்துளிர்க்க, அடங்காத காளையாக கைமாறிப் போனான்.

மெல்ல மெல்ல அவனாகவே துண்டித்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/103&oldid=1049626" இலிருந்து மீள்விக்கப்பட்டது