பக்கம்:உத்தரகாண்டம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104   ✲   உத்தரகாண்டம்

கொள்ளவில்லை; இங்கு வரவும் இல்லை. குடி, சூது, கெட்ட வழக்கம் எதுவுமே கிடையாது. ராதாம்மா போன போதுகூட வந்தான். திருப்பராய்த்துறை ஆசிரமத்தில் வேலை செய்திட்டிருக்கேன்மா, அப்பப்ப அண்ணன் குழந்தைகளைப் பார்ப்பேன்... முந்தாநாதா, பேப்பருல செய்தி பார்த்தேன்... பொய்யா இருக்கக் கூடாதான்னு நினச்சேனே"ன்னு அழுதான். அப்போதே உடம்பு வத்தி, எதிலும் பிடிப்பில்லாதவனாக இருந்தான். காவேரி புதைமணலில் சிக்கி இறந்ததாக ஒரு கார்டு வந்தது. அப்போது அம்மா இருந்தார். சந்திரி ‘நர்ஸ்’ படிப்பு முடித்துவிட்டு, கொஞ்ச நாட்கள், ஒரு தனியார் மருத்துவமனையில் முந்நூறு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாள். பிறகு ஏதோ வாய்ப்பு வந்ததென்று அமெரிக்கா சென்றாள். எப்போதேனும் ஒரு கடிதம் வரும். அவள் திகைத்து நிற்கையில்.

அம்மாவே பின்புறமாகக் குரல் கொடுத்தாள். “தாயம்மா...?” அவள் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு சென்றாள்.

“மோகன் வந்திருக்கான், கலியாணம். சினிமாப்படக்காரர் பொண்ணாம். சந்தோச சமாசாரம் வா...!”

“அம்மா, நா அவனைப் பார்க்கவே பிரியப்படல...” மனசுக்குள் சொல்லத் தெரியாமல் வேதனை. ஆத்திரம், பொங்க அவளை அசையவிடாமல் தடுத்தன.

“அட, சீ! இதென்ன அசட்டுப் பிடிவாதம்? ஒரு நல்ல காரியம், பெத்தவங்க பெரியவங்களுக்குப் பத்திரிகை வச்சு, ஆசீர்வாதம் வாங்கணும்னு வந்திருக்கிறான், அய்யாவே சந்தோசப்படுறார் வா!”

அவள் போய் கூடத்தில் நின்றாள். அவன் நேராக அவள் காலில் வந்து விழுந்தான். இது போல், அய்யா, அம்மாவுக்கும் மாலைகள் கொடுத்துக் காலில் விழுந்திருப்பதாகத் தெரிந்தது. இவளுக்கு மாலை இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/106&oldid=1049631" இலிருந்து மீள்விக்கப்பட்டது