பக்கம்:உத்தரகாண்டம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108   ✲   உத்தரகாண்டம்

உடுத்து, வெள்ளை ரவிக்கை போட்டுக் கொண்டு வந்து எல்லோரிடமும் பேசினார்...

அந்த சினிமா பற்றி அப்போது, அவளுக்குத் தவறுதலான கருத்தே விழவில்லை.

தன் மகனைச் சுற்றியே அவள் செவியில் விழுந்த செய்திகள், அங்கு ஒழுக்கம் என்ற வரை முறைகளுக்கு இடமில்லை என்ற கறை அவள் உணர்வில் வெறுப்பூட்டிவிட்டது.

“இந்தாங்க, போஸ்ட் வந்திருக்கு....”

ரங்கன் ஒரு கார்டைக் கொண்டு வந்து பெஞ்சியில் போடுகிறான். ஈரச் சேலையை உலர்த்திக் கொண்டிருப்பவள் திரும்பிப் பார்க்கிறாள். வானம் மூட்டமாக இருக்கிறது.

“எனக்கா, போஸ்டு? எனக்காரு எழுதப் போறாங்க?”

ரங்கன் வெறும் சவடால்தான். படிக்க எழுதப் பவிசில்லை என்பது அவள் அனுமானம். அவளுக்கு சம்பு அம்மா எழுதப் படிக்கக் கற்பித்திருக்கிறாள். இந்தியும் ஆங்கிலமும் கூட, குருகுலக் கூடத்தில் அந்தக் காலத்தில் பிள்ளைகள் பயிலும்போது உடன் இருந்து நனைந்திருக்கிறாள். பேச எழுத வராது. எழுத்துப் புரியும். கறுப்பு மை தடவி, வந்திருக்கும் துக்கக் கடிதம்...

“சென்ற 28ந்தேதி வியாழக்கிழமை, இரவு பத்து மணிக்கு, எங்கள் தந்தையும், சின்னம்புலியூர் மிராசுதாரருமாகிய தெய்வ நாயகனாரின் புதல்வர் தியாகி, தண்டபாணி, அமர பதவியடைந்தார் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு, ராஜேசுவரி அம்மாள் மனைவி...”

மூன்று மகள்கள் - மருமகன்களின் பெயர்கள், மகன்களின் பெயர்கள் எல்லாம் எழுதியிருக்கிறார்கள். இரண்டு மாசம் முன்பு அங்கே வந்த இளைய பெண் மணிமேகலையின் புருசன் பெயரும், நந்தகுமார் என்று பதிவாகி இருக்கிறது. குடும்பப் பெருமை. கடமைகளைக் காற்றில் பறக்க விட்டவர்களை விலக்க முடியாத, ஊர், சமூகக் கட்டுப்பாடுகள், கவுரவங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/110&oldid=1049637" இலிருந்து மீள்விக்கப்பட்டது